சனி, 5 செப்டம்பர், 2015

வேளாண் கருவி கண்டுபிடித்த அணு ஆராய்வு விஞ்ஞானி!

இராஜபாளையத்தைச் சேர்ந்த திரு.விஜயராகவன் வயது 29. நானோ எலக்ட்ரானிக்ஸில் ஆய்வுப் படிப்பை முடித்திருக்கிறார் அவர். அய்ரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகத்தில் (CERN) விஞ்ஞானி. அணு கதிர்வீச்சின் அளவைக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடிப்பதுதான் அங்கு வேலை. JABLOTRON ALARMS என்ற நிறுவனத்தில் வேலை.
இந்த வேலைகளையும் செய்து கொண்டே வார இறுதிநாட்களில் கடுமையாக உழைத்து விவசாயத்தை மேம்படுத்துவதற்கான கருவியை அண்மையில் அவர் கண்டுபிடித்துள்ளார். அய்ரோப்பிய கமிஷனின் நிதியுதவியின் கீழ் செயல்படும் கிளைமேட் கே.அய்.சி என்ற அமைப்பு இந்தக் கண்டுபிடிப்பை அங்கீகரித்துள்ளது. அய்.நா சபையின் கீழ் இயங்கும் சர்வதேச தொலைத் தொடர்புத்துறை 150 இளம் விவசாயத் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அதில் அவருக்கு 15 ஆவது இடம்.
கதிர்வீச்சின் அளவைக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடிக்கும் வேலையில் இருக்கும் உங்களுக்கு எப்படி விவசாயத்தை மேம்படுத்தும் கருவியைக் கண்டுபிடிக்க ஆர்வம் வந்தது? என்று கேட்டால், நான் ஒரு விவசாயியின் மகன் என்கிறார் அழுத்தந் திருத்தமாக.
நம்நாட்டில் எல்லாரும் படிக்கிறார்கள். பட்டம் பெறுகிறார்கள். கணினி தொழில்நுட்பம் முதற்கொண்டு பல வேலைகளுக்குப் போய்விடுகிறார்கள். ஆனால் விவசாயம் செய்யச் செல்வதில்லை.
விவசாயப் படிப்பு படித்தவர்கள் கூட நேரடியாக விவசாய வேலைகளைச் செய்யாமல் அலுவலக வேலைகளுக்குப் போய்விடுகிறார்கள். இது ஏன்? மரபுவழிச் செய்யப்படும் விவசாயத்தை, அறிவியல்பூர்வமாகச் செய்தால், பல இளைஞர்கள் விவசாயத்தை நாடி வருவார்கள்.
ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டு நான்கு ஆண்டுகள் கழித்துச் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் அவர். நல்ல நீர் வளம் உள்ள செழிப்பான ஊரில் தண்ணீர் பற்றாக்குறை. கிணற்றில் கொஞ்சம்தான் தண்ணீர். ஆனாலும் வழக்கம்போல் நிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இடையில் மின்வெட்டு வேறு. தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும். மின்சாரத்தை மிச்சப்படுத்த வேண்டும். என்ன செய்யலாம்? என்று யோசித்தார்.
நிலத்தின் ஈரப்பதம் எந்த அளவுக்கு உள்ளது? என்பதைக் கணக்கிட முடிந்தால், எந்த இடத்தில் எந்த அளவுக்குத் தண்ணீர் தேவையோ அந்த அளவுக்கு மட்டும் தண்ணீரைப் பாய்ச்சினால் போதுமே? இதனால் தேவையில்லாத இடத்துக்கும் கூட தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லையே? எனவே நிலத்தின் ஈரப் பதத்தைக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தேன் என்கிறார் அவர்.
அவர் கண்டுபிடித்த கருவி நிலத்தின் ஈரப்பதத்தை மட்டும் கணக்கிடவில்லை. மண்ணில் எந்த அளவுக்கு கார அமிலத்தன்மைகள் உள்ளன; அதாவது என்னென்ன சத்துகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதையும் கணக்கிடுகிறது.
இந்தக் கருவியை ஆங்காங்கே நிலத்தில் புதைத்து வைத்துவிட வேண்டும். ஒரு நிலத்தில் குறைந்தது 5_8 கருவிகளைப் புதைத்து வைத்துவிட வேண்டும். இந்தக் கருவியில் சென்சார்கள் உள்ளன. அவற்றின் மூலம் நிலத்தின் ஈரப்பதம், நிலத்தில் உள்ள கார, அமிலத்தன்மையைக் கருவி கணக்கிட்டு விடும். அந்தத் தகவல்கள் நிலத்தின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்எம் மோடத்துக்கு வந்துவிடும். அதிலிருந்து செல்போன் டவர் மூலமாக சர்வருக்குத் தகவல்கள் போய்விடும். விவசாயி வைத்திருக்கும் செல்போனின் சிம் கார்டு மூலமாக சர்வரில் உள்ள இந்தத் தகவல்கள் செல்போனில் தெரிய வரும்.
நிலத்தில் தண்ணீர் இல்லையா? சிவப்பு நிறம் தெரியும். தண்ணீர் இருக்கிறதா? பச்சை நிறம் தெரியும். இராஜபாளையத்து விவசாயி ஏதோ ஒரு வேலையாகச் சென்னைக்கு வந்துவிட்டால், செல்போனைப் பயன்படுத்தி சென்னையில் இருந்தே இராஜபாளையம் நிலத்துக்கு நீர் பாய்ச்ச முடியும். இனிமேல் நீர் பாய்ச்சத் தேவையில்லை என்றால் உடனே நிறுத்திவிடவும் முடியும் என்கிறார் விஜயராகவன்.
மண்ணின் கார, அமிலத் தன்மை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டால் எந்த நிலத்துக்கு எந்த உரங்களை எவ்வளவு போட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பயிர் விளையவில்லையே என்று ஒரு விவசாயி கண்ணீர் விடாமல், தேவையான உரங்களைப் போட்டு பயிரை நன்றாக விளைய வைத்துவிடலாம்.
சொட்டு நீர்ப் பாசனம் நடைபெறும் இடங்களில் சொட்டுநீர்க் குழாயில் இந்தக் கருவியைப் பொருத்திவிட்டால், எந்த அளவு தண்ணீர் நிலத்துக்குத் தேவைப்படுமோ, அந்த அளவுத் தண்ணீர் மட்டுமே குழாயிலிருந்து வெளிவரும். தண்ணீர் தேவையில்லை என்றால் தானாகவே நின்றுவிடும். இதனால் தேவைப்படும் இடத்தில் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் பயன்படுத்தப்படும். ஒரு துளி கூட வீணாகாது என்கிறார்.
தஞ்சாவூர் பகுதிகளின் நிலங்களில் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தினால், அந்தப் பகுதிக்கு எவ்வளவு தண்ணீர் தேவை? எந்தெந்த உரங்கள் எவ்வளவு தேவை? என்பன போன்ற தகவல்களை அரசு தெரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிடுவதைப் பற்றி, உரங்களை உற்பத்தி செய்வதைப் பற்றி அரசு முடிவெடுக்க முடியும்.
இந்த நிலத்துக்கு இந்த உரத்தை இவ்வளவுதான் போட வேண்டும் என்பது தெரிந்துவிட்டால், தேவையில்லாத உரங்கள், அளவுக்கு அதிகமான உரங்கள் போடத் தேவையில்லை. நிலமும் கெட்டுவிடாது. இந்தக் கண்டுபிடிப்பால் கார்பன் டை ஆக்ஸைடின் அளவையும் குறைக்கலாம் என்கிறார் விஜயராகவன்.
இந்தக் கருவி இன்னும் மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதை உலகம் முழுவதும் பயன்படுத்த முடியும் என்பதால்தான், பலநாடுகள் அங்கீகரித்து உதவி செய்ய முன் வந்திருக்கிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்புக்கு தனக்கு உதவியாக தமிழகத்தில் அஸ்லாம், அனூப், ஆனந்த், முத்துசாமி, மகாலக்ஷ்மி, ஜெயராமன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்கிறார் விஜயராகவன்.
விஜயராகவனுக்கு நமது உளமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
-உண்மை,16-31.8.15