புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து, தலைநகர் டில்லியைச் சுற்றி போராட்டங்கள் நடந்த வரும் நிலையில், இந்தச் சட்டங்கள் குறித்த விவசாயி களின் அச்சங்கள், விவசாய ஒழுங்குமுறை விற் பனைக் கூடங்களின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் வேளாண் துறையின் நிலை ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வ நாதனிடம் பேசினார், விவசாயம், உணவுப் பாதுகாப் புத் துறை நிபுணர் டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன். அந்தப் பேட்டியிலிருந்து:
கே. மத்திய அரசின் வேளாண்மை தொடர்பான மூன்று சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லி அருகில் விவசாயிகள் போராடிவருகிறார்கள். அவர் களுடைய பிரதான அச்சம் என்னவாக இருக்கும்?
ப. விவசாய விளைபொருளுக்கு தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அமைப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் அவர்களு டைய பிரதானமான அச்சம். அதனால்தான் இவ் வளவு பெரிய போராட்டம் நடக்கிறது. துவக்கத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதை இந்தச் சட்டங்களின் ஒரு பகுதியாக மாற்றுங்கள் என்றார்கள். ஆனால், அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. ஆகவே இப்போது மொத்தமாக, இந்த மூன்று சட்டங்களையும் நீக்க வேண்டும் என்கிறார்கள். அரசாங்கம், இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற முறை தொடரும் என்கிறது.
ஆனால், இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை எதன் வழியாகச் செயல்படுகிறதோ, அந்த அமைப் புகளை இந்த மூன்று சட்டங்களும் காலியாக்குகின்றன என்பதுதான் விவசாயிகளின் பிரதானமான அச்சம். ஆகவே, குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும் என்பதை எழுத்துபூர்வமாகக் கொடுங்கள் என் கிறார்கள்.
கே. ஆனால், நாட்டின் பல பகுதிகளில் இந்தப் போராட்டத்திற்கு பெரிய ஆதரவு இல்லை என்பது போல இருக்கிறதே..
ப. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது எல்லா விளை பொருளுக்கும் அறிவிக்கப்படுவதில்லை. விவசாயிகள் ஆயிரக்கணக்கான பொருட்களை விளைவிக் கிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது 23 பொருள்களுக்கு மட்டும்தான் அறிவிக்கப் படுகிறது. ஒரு பயிருக்கான பருவம் துவங்கும்போது, அந்தப் பயிருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அறிவிக்கப்படும். அது வெறும் அறிவிப்பு.
அது செயல் வடிவம் பெற வேண்டுமானால், கொள்முதல் நடக்க வேண்டும். ஆகவே, அறுவடை நடக்கும்போது, இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கொடுத்து நாங்கள் வாங்கிக் கொள் வோம் என அறிவித்து, அரசு கொள்முதல் செய்ய வேண்டும். தனியார், அதைவிட குறைவான விலைக்கு வாங்கவிடாமல் தவிர்ப்பதற்கான அமைப்புதான் இது.
23 பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை அறி விக்கப்பட்டாலும், அரிசி, கோதுமை ஆகிய இரண்டு பொருட்களுக்குதான், இந்த ஆதரவு சரியாகக் கிடைக்கிறது. அதுவும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை. பஞ்சாபிலும் ஹரியாணா விலும்தான் இந்தக் கொள்முதல் தீவிரமாக நடக்கிறது. அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவில் உணவு தானியங்களைச் சேமித்துவைக்கக்கூடிய அமைப் பான இந்திய உணவுக் கழகம், ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை பெருமளவில் பஞ்சாபிலும் ஹரியாணாவிலும்தான் வாங்குகிறார்கள். பஞ்சாபில் விளையக்கூடிய கோது மையில் 60 விழுக்காட்டை இந்திய உணவுக் கழகமே வாங்கிக் கொள்ளும். 75 சதவீத அரிசியை அவர்களே வாங்கிக் கொள்வார்கள். பிற இடங்களிலும் கொள் முதல் நடக்கும் என்றாலும் இந்த இரண்டு மாநிலங் களில்தான் பெருமளவில் கொள்முதல் நடக்கும்.
ஆகவே, இந்தப் புதிய சட்டம் வரும்போது தங்கள் பாதிக்கப்படுவோம் எனக் கருதக்கூடியவர்கள் இந்த இரு மாநிலங்களிலும் அதிகம் இருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் பெரிதாகப் போராடுகிறார்கள்.
கே. இந்தப் போராட்டங்களின்போது, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எனப்படும் கிறிவிசி குறித்தும் விவசாயிகள் அதிகம் கவலை தெரிவிக் கிறார்கள்... விளைபொருள் விற்பனையில் இவற்றின் பங்கு என்ன?
ப. குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் இந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள். உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு, அதோடு குறிப் பிட்ட சதவீதம் லாபத்தை சேர்த்து, இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணியிக்கப்படுகிறது. இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அமைப்பு செயல்படுவதற்கான கருவிதான் வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள். இதற்கு முன்பாக, வேளாண் விளை பொருட்களின் விற்பனை என்பது வியாபாரிகளின் வேட்டைக்களமாக இருந்தது. எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்குவது நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் விவசாயிகளைப் பாதுகாக்க ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் கொண்டுவரப் பட்டன. இங்கே விவசாயிகள் பொருட்களைக் கொண்டுவருவார்கள். அதை வாங்கவிருக்கும் வியா பாரிகளும் வருவார்கள். இதற்குப் பிறகு, அங்கிருக்கும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் அந்தப் பொருளுக்கான விலை தீர்மானிக்கப்படும். அதில் இரண்டு விஷயங்கள் கவனிக்கப்படும். ஒன்று, குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாக விலை இல்லாமல் இருப்பது உறுதிசெய்யப்படும். இரண்டாவதாக, போட்டி உறுதி செய்யப்படும். அதா வது, வியாபாரிகள் கூட்டணி அமைத்து, பொருட்கள் வாங்குவதைத் தடுப்பது அங்கே நடக்கும்.
அதற்காக, ஒவ்வொரு வியாபாரியும் தாங்கள் அந்தப் பொருட்களை எந்த விலைக்கு வாங்கிக் கொள்வோம் என்பதை எழுத்து மூலமாக - அதாவது விலைப் புள்ளியை - தர வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, யார் அதிக விலை கோரியிருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த தானியம் விற்கப்படும். அந்தப் பணத்தை அரசு அதிகாரியிடம்தான் கொடுக்க வேண்டும். அதிகாரி, அதை விவசாயியிடம் தருவார். இதுதான் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் செயல்படும்முறை. ஆனால், பெரும்பாலும் இப்படி நடப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.
கே. தமிழ்நாட்டில் இந்த வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் எப்படி நடக்கின்றன?
ப. தமிழ்நாட்டில் இதற்கான சட்டங்கள் இருக் கின்றன. ஆனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங் களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மொத்தமாகவே சுமார் 270 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்தான் உள்ளன. தமிழ்நாட்டின் பரப்போடு ஒப்பிட்டால், இந்த எண்ணிக்கை மிகக் குறைவு. அவையும் சிறப் பாக செயல்படவில்லை என்பதுதான் விவசாயிக ளின் குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள், வியாபாரிக ளுக்கு துணை போகிறார்கள் என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் காலகாலமாக சொல்லிவருகிறார்கள். ஆகவே, பெருமளவு விளைபொருட்கள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியில்தான் விற்கப்படுகின்றன.
கே. ஆகவே, இந்தச் சட்டத்தால் என்ன நடக்கு மென விவசாயிகள் அஞ்சுகிறார்களோ, அது ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடந்துவிட்டதா?
ப. தமிழ்நாட்டை விட மோசமாக பிஹார் போன்ற மாநிலங்களில் நடக்கிறது. 2006க்குப் பிறகு, அங்கே எல்லா வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களும் முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டன. இதனால், அங்கு எப்போதுமே குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவான விலைக்கே தானியங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
கே. ஒப்பந்த விவசாய முறைக்கு இந்தச் சட்டங்களில் ஒன்று அங்கீகாரம் அளிப்பது குறித்து அச்சம் எழுப்பப்படுகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏற்கனவே கரும்பு போன்ற பயிர்கள் ஒப்பந்த முறையில்தான் விளைவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், அதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படுவது குறித்து அச்சப்படுவது ஏன்?
ப. கரும்பு ஒப்பந்த விவசாயத்திலேயே நமக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கவில்லை என்பதால் தான் இந்த அச்சம். முதலில் கரும்பாலைகள் எப்படி இயங்குகின்றன என்று பார்க்கலாம். ஒரு கரும்பாலை தொடர்ச்சியாக இயங்க, தினமும் கரும்பு தேவைப் படும். இந்தக் கரும்பைப் பெறுவதற்காக, ஒவ்வொரு ஆலைக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்தப் பகுதியில் விளையும் கரும்பு இந்தக் குறிப்பிட்ட கரும்பாலைக்குத்தான் வழங்கப் பட வேண்டும்.
இதற்குப் பிறகு, ஒவ்வொரு விவசாயியிடமும் அந்தக் கரும்பாலை தனித்தனியாக ஒப்பந்தம் செய்துகொள்ளும். குறிப்பிட்ட வகை கரும்பை பயிர் செய்தால், ஒரு டன் கரும்பை குறிப்பிட்ட விலைக்கு வாங்கிக் கொள்வதாக அந்த ஒப்பந்தம் செய்யப்படும். இதில், அந்தக் கரும்புக்கான விலையை அரசுதான் நிர்ணயிக்கும். அந்த விலையை கரும்பாலை தந்து விட வேண்டும். ஆனால், இப்படி அரசின் கட்டுப் பாடுகள் இருக்கும்போதே, விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையாக இருக்கிறது.
இந்தப் புதிய சட்டத்தின்படி விவசாயியும் வாங்கு பவரும் ஒரு குறிப்பிட்ட விலைக்கு ஒப்புக்கொண்டு, ஒப்பந்தம் செய்வார்கள். ஒப்பந்தம் செய்த பிறகு, பொருளை வாங்குவதும் வாங்காததும் வியாபாரியின் விருப்பமாக இருக்கும். தவிர, விளை பொருளின் தரம் என்பதை வாங்குபவர் ஏற்காவிட்டால், அதன் தரம் குறித்து மூன்றாவது நபரிடம் செல்ல வேண்டும்.
அது போன்ற ஒரு மூன்றாவது நபரை வசப்படுத்து வது பெரிய வர்த்தகர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை யாக இருக்காது. அரசு போன்ற ஒரு கட்டுப்பாட்டாளர் இருக்கும்போதே, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை, நிலுவைத் தொகை இருக்கிறது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. அப்படி இல்லாவிட்டால் என்ன ஆகும்?
இதுதவிர, இரு தரப்புக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டால், சப் - டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டை அணுக வேண்டும் என்கிறது புதிய சட்டம். அதாவது ஒரு ஆர்.டி.ஓ. மட்டத்தில் இருக்கும் ஒரு அதிகாரியை அணுக வேண்டும். அங்கு வழங்கப்படும் முடிவு, விவசாயிக்கு ஏற்கக்கூடிய வகையில் இல்லையென் றால், மேல் முறையீடு செய்ய முடியாது. இதனால்தான் விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.
கே. தற்போது நடந்துகொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தில், தமிழக விவசாயிகள் பெரிதாக அக்கறை காட்டாதது ஏன்?
ப. ஏனென்றால் நாம் விவசாயத்திற்குப் பிறகான சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம். அதாவது, றிஷீ - கிரீக்ஷீணீக்ஷீவீணீஸீ சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, அய்ரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் மிகவும் குறைவானவர்கள்தான் விவசாயத்தைச் சார்ந்திருப்பார்கள். அதுபோன்ற ஒரு விஷயம்தான் இப்போது இங்கு நடந்துகொண்டிருக்கிறது. வேளாண் துறையை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகவும் குறைவு. பலரும் வேளாண் துறையைத் தவிர்த்து பிற துறைகளுக்கு மாற ஆரம்பித்துவிட்டார்கள்.
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் எல்லாம் வேளாண் தொழிலில் இருப்பதாக நினைப்பது மிக அபத்தமான ஒரு கருத்து. கிராமப்புறங்களில் இருப்ப வர்களில் பெரும்பாலானவர்கள் வேளாண் அல்லாத தொழிலுக்கு மாறிவிட்டார்கள். இவர்களின் எண் ணிக்கை பெரிய அளவில் இருக்கிறது. இதில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் தமிழ் நாடு இருக்கிறது.
இப்போது கிராமப்புறத்தில் இருப்பவர்களின் வருமானம் பல ஆதாரங்களில் இருந்து வருகிறது. இதில் வேளாண் வருவாய் என்பது மிகச் சொற்பமாகி விட்டது. ஆகவே, வேளாண்மைக்குக் கொடுக்கப் பட்டுவரும் முக்கியத்துவம் வெகுவாக குறைந்து விட்டது.
கே. அப்படியானால், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது எதிர்காலத்தில் கேள்விக் குறியாகுமா?
ப. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்குள் தனியாக உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. நாம் தண்ணீருக்காக பிற மாநிலங்களைச் சார்ந்திருக்கும் நிலையில், தற்சார்பு குறித்து பேச முடியாது. நமக்கான பொது விநியோகத் திட்டத்திற்கான தானியங்களில் எந்த அளவுக்கு மத்தியத் தொகுப்பிலிருந்து வரு கிறது? ஆகவே, தமிழ்நாடு உணவு விஷயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலம் அல்ல. அப்படி இருக் கவும் முடியாது.
நாடு முழுவதும் உணவு தானியங்களைக் கொண்டுசெல்ல எந்தத் தடையும் இல்லை. தவிர, தமிழ்நாடு தொடர்ந்து வளர்ந்துவரும்போது, இது போன்ற மாற்றங்கள் வரும். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வேளாண் பரப்பு குறைந்துவரும் நிலையிலும் உற்பத்தி குறையவில்லை. நிலத்தின் மதிப்பு உயரும்போது, வேளாண்மையைவிட்டுவிட்டு பிற தேவைகளுக்கும் நிலத்தை அளிப்பது தொடர்ந்து நடக்கும். அதைத் தவிர்க்க முடியாது
.
நன்றி: பி.பி.சி. தமிழ் இணையம்', 11.12.2020