திங்கள், 29 மே, 2023

வேளாண்மையில் ஒரு புது திருப்பம் வட்டாரத்துக்கு ஒரு வேளாண் அறிவியலாளர் தமிழ்நாடு அரசு ஆணை

  

சென்னை, மே 23 தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன் னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் வெளியிடப்பட்ட உயர் மகசூல் ரகங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கான பயிர் பாதுகாப்பு முறைகள், நவீன எந்திரங்கள் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கான யுக்திகள் போன்ற வற்றுக்கு அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு நேரடி யாக வழங்குவதற்காக வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற் றுக்கு ஒரு வேளாண் அறிவியலாளர் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த அறிவிப்பை செயல் படுத்தும் விதத்தில், இதற்கான கடிதத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பதிவா ளருக்கு (கோயம்புத்தூர்) வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமய மூர்த்தி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- வேளாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும், நவீன அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளையும் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு நேரடி யாக வழங்குவதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து, ஒரு வேளாண் அறிவியலாளர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பொறுப்பு அலுவலராக பணி அமர்த்துவதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இவர்கள் அந்த வட்டாரத்தில் பெய்யும் மழை, மண்ணின் தன்மை, பயிர் சாகுபடி, கடந்த ஆண்டில் பூச்சி மற்றும் நோய் தாக்கிய விவரங்கள், பயிரில் இருந்து கிடைக்கும் மகசூல், விற்பனை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களை சேகரித்து, அந்த வட்டாரத்தில் விவ சாயிகள் லாபம் தரும் வகை யில் மகசூல் பெற மாற்றுப் பயிர்களை உள்ளடக்கி பயிர் சாகுபடி திட்டம் ஒன்றை தயாரித்து அதை விவசாயிகளுக்கு அறிவு ரையாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

புதன், 3 மே, 2023

வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்

  

 தொடரட்டும் உழவர் புரட்சி - தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி!

aaaaa

மூன்றாவது முறையாக வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை என்பது எங்குமில்லாத முன்னுதாரணம். விவசாயம் என்பது 'பாவ தொழில்' என்ற மனுதர்மத்திற்கு எதிராக விவசாய நலனில், விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த சுமார் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்' ஆட்சியில், தமிழ்நாடு பல துறைகளில் ஓர் ‘அமைதிப் புரட்சியை' சந்தித்து மகிழ்ந்து வருகிறது. வாழும் வயிற்றிற்கெல்லாம் சோறிடும் மிக இன்றியமை யாத துறைதான் வேளாண்மைத் துறை; அதுமட்டுமல்ல, மனித நாகரிகத்தின் திருப்பமும் வேளாண்மையே ஆகும்.

வேளாண் என்பது மனிதகுலத்தின் 

வளர்ச்சிக்கு அடையாளம்!

காட்டுமிராண்டித்தனமாய் அலைந்து திரிந்து, உணவை வேட்டையாடிச் சேகரித்த தொடக்கால மனித குலம், பிறகு நாகரிகம் அடைந்ததின் அடையாளமே வேளாண்மைத் துறை.

மற்றவர்கள் நாடோடிகளாக (Nomadic) இருந்த நிலையை மாற்றி அவர்களை இருப்புக் கொள்ளச் செய்த புத்தாக்கம் தான் - நிலத்தை உழுது பயிரிட்டு மனித குலத்தைப் பட்டினியிலிருந்து பாதுகாத்துவரும் துறை வேளாண்மைத் துறை!

1

அத்துறையை மேலும் வளப்படுத்தி இன்றைய அறிவியல், மின்னணுவியல் வளர்ச்சியைப் புகுத்தி, புதிய ஆக்கப்பூர்வ சாதனைகளைச் செய்து, நமது வேளாண் பெருமக்களாக உள்ளவர்கள் ‘கடனிலே பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனிலேயே மறைந்து, தனக்குப் பின்வரும் சந்ததியினருக்கும் கடனையே' விட்டுச் செல்லும் பாரம்பரிய பரிதாப நிலைக்கு முடிவு கட்டி, தமிழ்நாட்டு வேளாண் பெருமக்களின் வாழ்வில் புதுவசந்தத்தை உருவாக்கவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முன் னெடுத்த குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று!

மூன்றாம் முறையாக வேளாண் பட்ஜெட்!

பொது பட்ஜெட்டிலிருந்து வேளாண்மையைத் தனியே பிரித்து, அதற்கென்று உள்ள வேளாண் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் 3 ஆவது முறையாக வேளாண்மைக்கான தனி பட் ஜெட்டை அளித்து, அத்துறையில் உள்ள நம் உழைக்கும் விவசாயிகள் அகமும் முகமும் மலர்ச்சி அடைய, பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி - முதலமைச்சர் வழிகாட்டுதல்மூலம் சாதனை படைத்து வரும் சரித்திரத்தில் பொன்னேடுகளைப் பதித்து வருகிறது ஆட்சி.  அனைவரது வாழ்த்துகளும், பாராட்டுகளும் முதலமைச்சருக்கும், வேளாண் துறை அமைச்சருக்கும், ஒத்துழைத்தோருக்கும் உரியதாகும். ஓர் இனிய ஒன்பான் சுவை மிகுந்த உணவுபோல வேளாண் பெருமக்களுக்கு சமைத்துத் தந்துள்ளார் - பல முக்கிய வளர்ச்சித் திட்டங் களை அறிவித்தும் அவற்றிற்குரிய நிதி ஒதுக்கீடு செய்தும்!

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கிய உழவர் சந்தையால் உழவர்கள் பயன்பெற்றனர்; பொது மக்களும் இலாபம் அடைந்த நிலையை அறவே மறந்து, அரசியல் வன்மம் காரணமாக அந்த உழவர் சந்தையை மூடு விழா செய்தனர் - மூலையில் தள்ளப்பட்ட முந்தைய ஆட்சியினர்.

அவற்றைத் திறந்ததோடு, விரிவாக்கி, அங்கே கூடும் விவசாயிகள், விளைபொருள்களை வாங்கி மகிழும் மக்கள், பல்வேறு வசதிகளை - கிராமத்திலிருந்து வரும் வேளாண் பெருமக்களுக்கான உணவு விடுதி வசதி உள்பட செய்து தருவோம் என்ற அமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பும் நம் வேளாண் மக்களை, வளர்ந்துவரும் விவசாய நாடுகளுக்கு அழைத்துச் சென்று, புதிய அறிவியல் வளர்ச்சிகளைப் புரிந்து, புகுத்தி, தங்களையும், நாட்டினையும் வளர்ச்சிப் பாதை நோக்கி வேக நடை போட பல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டானது ஆகும்!

பாராட்டி எழுதுவதற்கு எண்ணற்ற அம்சங்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பலப்பல உள்ளன.

‘அகல உழுவதைவிட ஆழ உழுவதுமேல்' என் றொரு வேளாண் பழமொழி உண்டு. ஆழத்திலும், அகலத்திலும் இரண்டிலுமே உழுதுள்ளது இவ்வாண்டு இந்தப் பட்ஜெட்!

நமது ‘திராவிட மாடல்' ஆட்சியில் - இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2023-2024) செம்மொழி - எம்மொழியின் இலக்கிய மேற்கோள் மணம் வீசுகிறது!

ஒருபோதும் ‘‘பழைய பஞ்சாங்கமாய்''  வேளாண்மை விளங்காமல், மாறிவரும் அறிவியல், மின்னணுவியல் சூழலுக்கு ஏற்ப, அத்துறையில் அதிக வேகமான, நுட்ப மான தொழில்நுட்பவியலைப் புகுத்திடும் திட்டங்கள் எவரையும் திகைக்க வைக்கக் கூடியவை; திக்கெட்டும் ஆட்சியின் சாதனை என்ற புகழ் ஒளியைப் பாய்ச்சி பரப்பக் கூடியவை.

எத்தனை எத்தனை வளர்ச்சித் திட்டங்கள்!

1. சாகுபடி பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு

2. இரண்டு ஆண்டுகளில் 1.50 லட்சம் புதிய மின் இணைப்புகள்

3. பயிர்க் காப்பீட்டு மானியத்திற்கு 2,337 கோடி ரூபாய்  ஒதுக்கீடு

4. தண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவ 450 கோடி ரூபாய்

5. நெல் குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத் தொகை

6. 10 லட்சம் குடும்பங்களுக்குப் பழச்செடிகள் வழங்கல்

7. எல்லாவற்றிற்கும் மேலாக உணவு தானிய உற்பத்தி 127 லட்சம் டன் இலக்கு

8. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் விருது!

‘திராவிட மாடல்' என்பது சமூகநீதி - வேளாண்மை மக்களுக்கு சமூகநீதியை பல வகைகளிலும் இந்த பட்ஜெட் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. பலரை தொழில் முனைவோர்களாக ஆக்கி, உயர்த்திட அடிக்கட்டுமானத்தை ஆழமாக்கிடும் தொலைநோக்குத் திட்டங்கள் இதில் துல்லியமாகப் பளிச்சிடுகின்றன!

மனுதர்மம் என்ன கூறுகிறது?

சனாதனத்தின் சாசனமான மனுதர்மத்தில் (அத்தி யாயம் 10; சுலோகம் 84)

‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக் கிறார்கள்; அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக் கப்பட்டது. ஏனெனில்,  இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும், மண்வெட்டியும் பூமியையும், பூமியில் உண்டான பலப்பல ஜந்துக்களையும் வெட்டுகிற தல்லவா!''

இதைவிட பகுத்தறிவிற்கும், சமூக வளர்ச்சிக்கும் விரோதமான பிற்போக்குக் கருத்தும் கலாச்சாரமும் வேறு உண்டா?

திராவிடத் தத்துவம் சனாதனத்திற்கு நேர் விரோத மானது.

‘உழுதுண்டு வாழ்வோர் உலகத்தோர்க்கு அச்சாணி' என்பதுதானே அறிவுடன் கூடிய சுயமரியாதைக் கருத்து. (திராவிட கருத்தியல்). அந்த நமது ஒப்பற்ற பண்பாட் டினை உலகறியச் செய்ய வித்தூன்றி, வேளாண் துறை யில் ஓர் அமைதிப் புரட்சியுடன் தொடக்கம் - தொடரட்டும்!

தொடரட்டும் உழவர் புரட்சி!

‘‘பாராட்ட வார்த்தைகளே இல்லை'' என்று பகுத்தறிவு உள்ளோரும், வன்மம் இல்லாது வாழ்த்துவோரும் நிச்சயம் கூறும் வகையில் இப்பட்ஜெட் உள்ளது!

தொடரட்டும் உழவர் புரட்சி!

தொடரட்டும் ‘திராவிட மாடல்' ஆட்சி!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.3.2023 

செவ்வாய், 2 மே, 2023

தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன அம்சங்களைக் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்

   

👉தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்        

👉தகவல் பரிமாற்றக் குழு, பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

👉நேரடி நெல் கொள் முதல், விவசாயிகளுக்குப் பரிசு உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்படும்


16
வேளாண் நிதி நிலை அறிக்கையில் சிறப்பான அம்சங்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன அம்சங்களைக் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

14

சென்னை, மார்ச் 21 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்று (21.3.2023) காலை 10 மணிக்குக் கூடியதும், சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றுவார் என அறிவித்தார். இதையடுத்து அமைச்சர் இத்துறைக்கான 83 பக்க நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார். 

அவரது உரை வருமாறு:

உழவர் பெருமக்கள் உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறவேண்டும், வர்த்தக ரீதியாக வருமானம் ஈட்ட வேண்டும், அறிவியலையும் உயர்ந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, மகசூலில் சாதனைகள் புரியவேண்டும் என்கிற அடிப்படையில்தான் சென்ற இரண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

வேளாண்மைத் துறையில் சவால்கள் 

தொழிற்சாலைகளுக்குத் தேவையான இடுபொருட்களைப் போதிய அளவுக்கு விளைவித்துத் தருவதும், வேளாண்மைத் துறையின் கடமை. இவற்றையெல்லாம் மனதில் வைத்து, 2021-2022 ஆம் ஆண்டில் பல தொலை நோக்குத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதன் காரணமாக மொத்த சாகுபடிப் பரப்பு, ஒரு இலட்சத்து 93 ஆயிரம் எக்டர் அதிகரித்து, மொத்தமாக 63 இலட்சத்து 48 ஆயிரம் எக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

மண் வளம் காக்கும் பணிகளால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-2022ஆம் ஆண்டில், 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை அடையப்பெற்றது. இது 2020-2021 ஆம் ஆண்டைவிட 11 இலட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதல் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

 முதலமைச்சர் அவர்கள், 2021 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதியன்றும், 2022 ஆம் ஆண்டில், 19 நாட்கள் முன்னதாக, மே 24 ஆம் தேதியன்றும் மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததனால், தஞ்சைத் தரணிக்கு தடையில்லாமல் நீர் கிடைத்து, வயல்களெல்லாம் நெல் பயிரினால் பச்சை தொற்றிக்கொண்டு பரவசமடைந்தன. இதனால், 2022-2023 ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நிகழ்ந்து, சாதனை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் நிகழாத சாதனை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

 முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக ஒரு இலட்சத்து அய்ம்பதாயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கி, சாதனை படைத்ததன் விளைவாக, வயல்களில் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ந்து வருகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்து, 2021-2022 ஆம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலமாக 'அக்ரி கிளினிக்', வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன.

நெல் மட்டுமின்றி, பயறு வகைகளும், கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு 195 ரூபாய் கூடுதலாக வழங்கி, கொள்முதல் நிகழ்த்தப்படுகிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள், மின்னணு சந்தைகள் (மீழிகிவி), ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசால் 1,695 கோடி ரூபாய் காப்பீட்டுக் கட்டண மானியமாக வழங்கப்பட்டு, ஆறு இலட்சத்து 71 ஆயிரம் விவசாயிகளுக்கு இதுவரை 783 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு வடகிழக்குப் பருவமழை, 2023 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 82 ஆயிரம் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக 163 கோடியே 60 இலட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் காடுகள் உருவாக்குவது இயற்கையை மேம்படுத்தவும், மண்மீது பசுமைப் போர்வை போர்த்தி, பூமியை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் குளிர்விப்பதற்காகவும் தான். அது கணிசமான அளவிற்கு வருவாயை ஈட்டித் தரும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு, சந்தனம், செம்மரம், மகோகனி, தேக்கு போன்ற 77 இலட்சம் உயர் இரக மரக் கன்றுகள் வழங்கப்பட்டு 30,000 ஏக்டர் பரப்பில் நடப் பட்டுள்ளன.

மின்னணு வேளாண்மையில், விதையில் தொடங்கி, விற்பனை வரை, 22 முக்கிய வேளாண் சேவைகள், 'உழவன் செயலி' மூலம் நல்ல முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மைத் துறை

வரும் ஆண்டில் தமிழ்நாட்டில் 127 இலட்சம் மெட்ரிக் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான இலக்கை அடைவதற்கு மேற்கொள் ளப்படவிருக்கின்ற நடவடிக்கைகளையும், திட்டங்களைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒவ்வொரு சிற்றூரும் தன் தகுதிக்கேற்ப தன்னிறைவு அடைய முடியும். தண்ணீர் வளத்திற்கு ஏற்பவும், மண்ணின் வளத்திற்கு ஏற்பவும், அந்தச் சிற்றூரில் வேளாண்மை முழு மையாக வளர்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதி களையும், வேண்டிய மற்ற  பணிகளையும் மேற்கொள்வ தற்காக உருவாக்கப்பட்ட திட்டமே, இத்திட்டம். 

வரும் ஆண்டில் இத்திட்டம் 2,504 கிராம ஊராட்சிகளில் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

 ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், தென்னை மரங்கள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங் கன்றுகள் வீதம் மொத்தம் 15 இலட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக 2,504 கிராமப் பஞ்சாயத்துகளில் வழங்கப்படும்.

தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்

2023 ஆம் ஆண்டை பன்னாட்டு சிறுதானிய ஆண்டாக அய்க்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அய்ந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இயக்கத்தில், வரும் ஆண்டில், தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றி ணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும். 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும்.

மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு "சிறுதானிய திருவிழாக்களும்" இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும்.

 வரும் ஆண்டில், ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் 82 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

விவசாயிகளுக்குப் பரிசு

 நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும், அய்ந்து இலட்சம் ரூபாய் பரிசினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அனைத்துப் பயிர்களுமே அரவணைக்கத்தக்கவை என்பதை அடிப்படையாகக் கொண்டு, நெல்லுக்கு வழங்கி வந்ததை, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில், வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா அய்ந்து இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

அதேபோல, உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல், விருதுகள் வழங்கப்படும்.

வேளாண்மை சார்ந்த பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற கல்வியைப் பயன்படுத்தி சொந்தக் காலில் நிற்கவும், தொழில் முனைவோராகப் பரிணாம வளர்ச்சியடையவும், வரும் ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விதை உரிமம், உர உரிமம், பூச்சி மருந்து உரிமம் ஆகியவை தேவைக்கேற்ப வழங்கப்படும்.

வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் மண்ணும், நீரும் நச்சுத் தன்மையடைந்து நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இயற்கையான எருவைப் பயன்படுத்தி இரசாயன உரங்கள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம்  முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 32 மாவட்டங்களில், 14,500 எக்டர் பரப்பில், 725 தொகுப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க, சான்றுக் கட்டணத்திற்கு 10,000 எக்டருக்கு மானிய உதவி அளிக்கப்படும். வரும் ஆண்டில் இதற்கென, 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அங்கக வேளாண்மையின் கீழ் கொண்டு வருவதற்கு சாத்தியமான பகுதிகளைக் கண்டறிவதற்கு, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும், அடிப்படைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

"நம்மாழ்வார் விருது"

அங்கக வேளாண்மையில்  நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் "நம்மாழ்வார்" பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது அய்ந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

தகவல் பரிமாற்றக்குழு

விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்புகள், மானியங்கள், பூச்சி-நோய் தாக்குதல் போன்ற தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வட்டார அளவில் விவசாயிகளைக் கொண்டு "வாட்ஸ்அப்" குழு உருவாக்கப்படும். இக்குழுவில் அனைத்து குக்கிராமங்களிலிருந்தும், விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக  வட்டார வேளாண்மை உதவி இயக்குநரும், தோட்டக்கலை உதவி இயக்குநரும் செயல்படுவார்கள்.

ஒரு தளம்-பல பயன்கள்

உழவர் நலன் சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டப்பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு சென்று, பல்வேறு ஆவணங்களை தனித்தனி படிவங்களில் தரவேண்டியுள்ளது. இத்தகைய நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கிக் கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து, கணினிமயமாக்கி புதிய இணையதளமான GRAINS' (Grower Online Registration of Agriculture Inputs System) அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும்(One Stop Solution) கிடைக்கும்.

பருத்தி இயக்கம்

வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4 இலட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்தும் வகையில், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

வரும் ஆண்டில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை, திருச்சி  மாவட்டம் பச்சைமலை, தருமபுரி மாவட்டம் வத்தல் மலை, சித்தேரி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, ஈரோடு மாவட்டம் தாளவாடி, பர்கூர், குதியாலத்தூர் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் உதவும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையானது, பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, பெரும் பல் நோக்கு கூட்டுறவு சங்கங்கள்(LAMPS),  தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து செயல்படுத்தப்படும்.

சர்க்கரைத் துறை 

தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, 2022-2023 அரவைப் பருவத்தில், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,821 ரூபாய்க்கு மேல் கூடுதலாக 195 ரூபாய் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் 253 கோடி ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

பத்து இலட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம்

வரும் ஆண்டில், பத்து இலட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு 15 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும்.

2023ஆம் ஆண்டை பன்னாட்டு சிறுதானிய ஆண்டாக அய்க்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அய்ந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

உழவர்களுக்கு அயல்நாட்டில் பயிற்சி

அயல்நாடுகள் சிலவற்றில் உயர் இரக தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தித்திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அங்கிருக்கும் தொழில் நுட்பங்களை நம் மாநில உழவர்களும் அறிவது, அவர்களுக்குள் ஊக்கத்தை உண்டாக்கும்.இத்திட்டத்திற்கென ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா

பாடப் புத்தகங்களில் படமாகவும், ஊடகங்களில் காணொலியாகவும் கண்ட வயல்களை, தோப்புகளை, தோட்டங்களை, பாசனக் கிணறுகளை, பழ மரங்களை, மாணவர்கள் நேரடியாக காண வேண்டுமென்பதற்காகவும், வேளாண்மையின் மகத்துவத்தை அவர்கள் அறிந்து, உணர்ந்து, தெளிந்து, தேற வேண்டுமென்பதற்காகவும், பண்ணைச் சுற்றுலா கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு இயந்திர பணிமனைகளில் ஒரு கோடி செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

உழவர் சந்தைகளைப் புதுப்பித்தல்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 உழவர் சந்தைகள் தமிழ்நாட்டில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகின்றன. இதனால், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, சராசரியாக நாளொன்றுக்கு 8,000 விவசாயிகள், மூன்று இலட்சம் நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.

மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டு, இரண்டு கல்லூரிகளுடன் தளிராக முளைவிடத் தொடங்கிய இப்பல்கலைக்கழகம், இன்று 18 அரசு உறுப்புக் கல்லூரிகள், 28 தனியார் இணைப்புக் கல்லூரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள், 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் என்று ஆல் போல் தழைத்து, செழித்து, நிழல் பரப்பி வருகிறது. அனைத்துப் பரிமாணங்களிலும் வளர்ச்சியடைந்து உலகளாவிய ரீதியில் இது புகழ்மிக்க கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. இப்பல்கலைக்கழகத்திற்கு, வரும் ஆண்டு 530 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல்

2022-2023 குறுவை, சம்பா கொள்முதல் பருவத்தில் (ரிவிஷி) இதுவரை 3 இலட்சத்து 73 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 27 இலட்சத்து 23 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 5,778 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் ஆண்டு நெல் கொள்முதல் செய்ய சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடுதலாக 100 ரூபாயும், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடுதலாக 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் 

வரும் ஆண்டில், 6,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை வள மேலாண்மைப் (NRM) பணிகளான தடுப்பணை, பண்ணைக் குட்டைகள், கசிவு நீர்க்குட்டைகள், புதிய குளங்கள், கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள், கல் வரப்பு, மண் வரப்பு, தனிநபர் கிணறு, சமுதாயக் கிணறு, பால் சேகரிப்பு மய்யம், உணவு தானியக் கிடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிட 19,400 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் நிதி நிலை அறிக்கையில் கூறியுள்ளார்.

ஞாயிறு, 19 மார்ச், 2023

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

 

சென்னை மார்ச் 15-  வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக் கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-அய்  (TamilNadu Organic Farming Policy) முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் நேற்று (14.2.2023) வெளியிட்டார். 

ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதி கரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: 

2021-2022ஆ-ம் ஆண்டுக் கான வேளாண்மை - உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், ‘அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண் புழுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து மண் வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப் பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய, இயற்கை வேளாண் விளை பொருட்களின் தேவை அதி கரித்துள்ளதோடு விழிப்புணர் வும் அவசியமாகி உள்ளது. இவற்றை கருத்தில்கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர் பான பணிகளை சிறப்பு கவனத் துடன் செயல்படுத்துவதற்காக, வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப் பிரிவு உருவாக்கப் படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற் காக வேளாண்மை - உழவர்நலத் துறை செயலர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக் கப்பட்டுள்ளது. அக்குழுவின் மூலம் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல் திட்டம் மற்றும் விதி முறைகள் உருவாக்கப்பட்டுள் ளன. அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாடு விவசாயிகள் இடையே அதி கரித்தல், நிலங்களில் ரசாயன இடுபொருட்களின் பயன் பாட்டை படிப்படியாக குறைத்து, இயற்கை இடு பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.

கொள்கையின் நோக்கம்: 

அங்கக வேளாண்மை கொள்கை மூலம் மண் வளம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாது காத்தல் மற்றும் நிலைத்திருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். பாதுகாப்பான, ஆரோக் கியமான மற்றும் சுற்றுச்சூழ லுக்கு உகந்த உணவை வழங் குதல், அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தி, அங்கக வேளாண்மை நடைமுறைகள் விரிவாக்கம் செய்யப்படும். அங்கக சான் றளிப்பு முறைகள், நச்சுத் தன்மை பகுப்பாய்வு நெறி முறைகளை வலுப்படுத்துதல், பண்ணையில் உற்பத்தி செய் யப்படும் அல்லது பண்ணைக்கு அருகில் உற்பத்தி செய்யப்படும் தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடுபொருட்கள் ஊக்குவிக்கப்படும். மேலும், சந்தை ஆலோசனைகள், சான் றிதழ் ஆலோசனைகள் வழங் கப்படுவதுடன் ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங் கக வேளாண்மை கொள்கை யின் நோக்கங்களாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 18 மார்ச், 2023

45 கிலோவில் காச்சில் கிழங்கு

 

அருமனை, ஜன. 11- கன்னியா குமரி, அருமனை அருகே உள்ள மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிர தீஸ். இவர் தனது நிலத் தில் பலவிதமான கிழங்கு வகைகளை பயிரிட்டு வருகிறார். அதில் ஒன்று காச்சில் கிழங்கு. இந்த கிழங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். அதன்படி அறுவடைக்கு தயாரான காச்சில் கிழங்கு வெட்டி எடுக்கும் பணியில் பிர தீஸ் ஈடுபட்டார். அப்போது, கிழங்கு பூமிக்கு அடியில் ஆழமாக சென்றதை கண்டார். சுமார் 8 அடி ஆழத்தில் பல பிரிவு களாக சென்றிருந்த கிழங்கு முழுமையாக உடையா மல் பிரதீஸ் அறுவடை செய்தார். அதன் எடை 45 கிலோ இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். வழக்கமாக இந்த வகையை சேர்ந்த கிழங்கு ஒன்று அதிகபட்சமாக 20 கிலோ இருக்கும். ஆனால் இந்த கிழங்கு 2 மடங்கு எடையில் உள்ளது. இந்த கிழங்கை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த் துச் சென்றனர்.