உலகில் பல நாடுகளில் மியாவாக்கி என்ற அடர்வன காடு வளர்ப்பு முறை பிரபலமடைந்து வருகிறது. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறைதான் இந்த மியாவாக்கி முறை.
இதில், குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்த முடியும்.இந்த காடு வளர்ப்பு முறையில், நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்படும். இதன்மூலம் அவற்றுக்கு சூரிய ஒளி மேலிருந்து மட்டுமே கிடைக்கும். பக்கவாட்டில் மற்ற செடிகள் நெருக்குவதால், மரங்கள் சூரிய ஒளியை தேடி ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு மேல்நோக்கி வேகமாக வளரும். இதனால் 10 ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ, அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்து விடும். பொதுவாக இந்த முறையில் மரங்கள், இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும். இந்த வகையான காடு வளர்க்கும் முறை டில்லி, பெங்களூரு, அய்தராபாத் போன்ற நகரங்களில் பிரபலமடைந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது சென்னை மாநகரின் மய்யப் பகுதிகளில் அமைக்கப்பட்ட மியாவாக்கி காடுகளில் நடப்பட்ட செடிகள் வளர்ந்து மரங்களாகி பொதுமக்களுக்கு கண்குளிர காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.
கட்டுமானப்பணி - சாலை விரிவாக்கம்
சென்னையில் கட்டுமானப் பணி சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் பணி, மேம்பால பணி உள்ளிட்ட பல காரணங்களுக்காக சாலையோர மரங்கள் பல வெட்டப்படுகின்றன. அவற்றை ஈடு செய்யும் வகையில் பூங்காக்கள், பொது இடங்களில், சென்னை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக, மரக்கன்றுகள் நடப்பட்டாலும், அவை வளர்ந்து பசுமையை பரப்பும் வரை, சுற்றுச்சூழல் மாசு, வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. சென்னையில், சுகாதாரமான சுற்றுச்சூழலுக்கு, 33 சதவீத பசுமைப் பரப்பு இருக்க வேண்டியது அவசியம் என, சூழலியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், 12 சதவீத அளவு மட்டுமே பசுமைப் பரப்பு இருந்தது. இதனால், சென்னையின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு, சென்னை மாநகராட்சி சார்பில் அடையாறில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பில், ‘மியாவாக்கி’ என்ற அடர்வனம் தொடங்கப்பட்டது. இதில், 39 வகையான, 2,200 மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது, 15 முதல் 60 அடி வரை வளர்ந்துள்ளது.
தொடர்ந்து ஓர் ஆண்டில், சென்னை முழுதும், 1,000 இடங்களில் அடர்வனம் அமைக்கப்படும் என, சென்னை மாநகராட்சி சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை தற்போதைய திமுக ஆட்சியில் வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நீர்நிலையோரம், அரசு இடங்கள், பொதுப் பயன்பாட்டுக்கு விடப்பட்ட திறந்தவெளி காலி இடங்களில் அடர்வனம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு அடர்வனமும், 8000 முதல் 25 ஆயிரம் சதுர அடி பரப்பு உடையது. ஒவ்வொரு அடர்வனமும் தலா ₹ரூ.8 முதல் ரூ.10 லட்சம் வரை செலவு செய்யப்பட்டு, மொத்தம், 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.தற்போது 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த அடர்வனங்களில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் செழித்து வளர்ந்துள்ளன. பொதுமக்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு மரங்கள் வளர்ந்துள்ளது. இந்த குறுங்காடுகளால், அப்பகுதிகளில் குளிர் காற்று வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பசுமை பரப்பு அதிகரிப்பு
இதுதவிர, மேலும் பல இடங்களில், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புவாசிகளின் முயற்சியால், மரக்கன்றுகள், செடிகள் நடப்பட்டு, பசுமை பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் தற்போது, பசுமை பரப்பு 13 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை பகுதிகளில் மியாவாக்கி காடுகள் காற்று மாசை பெருமளவில் குறைக்கின்றன. அதன்படி சென்னையில் பல இடங்களில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குறுகிய இடத்தில் 2 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைக்கிறது. மியாவாக்கி முறையில் நடப்படும் மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளில் குட்டி காடுகளாக மாறிவிடும். அதன்பின்னர் எந்த பராமரிப்பும் தேவைப்படாது. 2 ஆயிரம் மரங்களை வளர்த்தால் ஆண்டுக்கு 11 டன் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொண்டு, 4 டன் ஆக்சிஜனை வழங்கும். காற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதால் மழைப்பொழிவும் அதிகரிக்கும். இதுதவிர, இந்த மரங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் கிடைப்பதுடன் பூமியின் வெப்பமும் வெகுவாகக் குறையும்’’ என்றனர்.
என்னென்ன மரங்கள்
மியாவாக்கி எனப்படும் இந்த அடர்வனங்களில் வேம்பு, நாகலிங்கம், நாவல், கொய்யா, கருவேப்பிலை, பட்டாடி, பெருநெல்லி, மா, சிறுநெல்லி, தூங்குமூஞ்சி, எழிலைப்பாலை, பலா, செண்பகம், பூமருது, மகிழம், மூங்கில், அத்தி, மருதாணி, புங்கம், சப்போட்டா, சரக்கொன்றை, பூவரசு, நொச்சி, சீத்தாப்பழம், செம்மயிற்கொன்றை, செம்மந்தாரை, வசந்தராணி, அச்சிநறுவிலி போன்ற, 40 வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதற்கு, மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 30 சதவீத பசுமை பரப்பை அதிகரிப்பதே இலக்கு என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த 6 மாதங்களில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி 1 லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் 1000 மியாவாக்கி காடுகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
80 ஆயிரம் மரங்கள் வளர்ந்துள்ளன
வடசென்னையில் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உருவாக்கப்பட்டு வரும் மியாவாக்கி காட்டில் சுமார் 80,000 மரங்கள் வளர்ந்துள்ளன. தென்சென்னையில் கோட்டூர்புரம் பகுதியில் 23,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 2,000க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இந்திரா நகர் பகுதியில் உள்ள மியவாக்கி காட்டில், 7,800 மரங்கள் வளர்ந்துள்ளன. வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் 155, ராயலா நகர் 2ஆவது பிரதான சாலையில், 10,000 சதுர அடி கொண்ட நிலத்தில் 6000 சதுர அடியில் ₹8.22 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரங்கள் ஒரு மீட்டர் இடைவெளி வீதம் 762 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்துள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 197இல் மாதிரிப்பள்ளி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 15,586 சதுர அடி கொண்ட நிலத்தில் 2800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அத்துடன் புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர் உட்பட பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. திருவான்மியூர், வேளச்சேரி, வியாசர்பாடி, தலைமைச் செயலகம், விருகம்பாக்கம், காந்திநகர் பகுதிகளிலும் இந்த குறுங்காடுகள் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளன. சென்னை மாநகர பகுதிகளில் தற்போது 20க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற குறுங்காடுகள் செழித்து வளர்ந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இத்திட்டத்தை வேகமாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, சென்னையில் மேலும், பசுமை பரப்பை அதிகரிக்க 800க்கும் அதிகமான இடங்கள் மாநகராட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக