பொன்னமராவதி, மே 29 வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவர் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பொன்னமராவதி வட்டார விவசாயிகள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற வேளாண்துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது கைப்பேசியிலிருந்து உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து இடுபொருள் முன்பதிவு என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும்.
நெல், உளுந்து, நிலக்கடலை, உயிர் உரங்கள் போன்ற அனைத்து வேளாண் இடு பொருள்களும் வலைத்தளத்தில் தங்கள் தொலைபேசியிலிருந்து முன்பதிவு செய்த பின்னரே உதவி வேளாண்மை அலுவலர்கள் தாங்கள் விவசாயிதான் என்ற உண்மைத் தன்மையை பரிசோதனை செய்து சமர்ப்பித்த பின்னரே கிடங்குகளில் பொருள் வாங்க முடியும்.
வேளாண்மை மேலாண்மை முகமை ஆத்மா திட்டம் செயல்படுத்தப்படும் வேளாண் பயிற்சிகளில் கலந்து கொள்ளவும் உள் மாவட்ட கண்டுனர் பயணம், வெளிமாவட்ட கண்டுனர் பயணம், செயல் விளக்கங்கள், போன்றவற்றில் பங்கு பெறவும் வேளாண் செயலியில் முன்பதிவு செய்யப்பட வேண்டும். மானியத் திட்ட விவரங்கள், வானிலை அறிக்கை, பூச்சி நோய் மேலாண்மை மற்றும் பல விவரங்களை உழவர் செயலியால் அறிந்து கொள்ளலாம்.
எனவே விவசாயிகள் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படும்படி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி கேட்டுக்கொண்டுள்ளார்.