செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

வீட்டிலேயே ஆர்கானிக் பூச்சி விரட்டி எப்படித் தயாரிப்பது?

2 கிலோ உரத்துக்கு ஒரு பான்ட் ஆற்றுமணலும், ஒரு பான்ட் செம்மண்ணும் கலந்துகொள்ள வேண்டும். எத்தனை கிலோ ஆர்கானிக் உரமாக இருந்தாலும் இந்த கணக்கின்படி கலந்து கொள்ளலாம். உரத்தை தொட்டியில் நிரப்பி மூன்று, நான்கு நாட்கள் கழிந்த பிறகுதான் நாற்று நடவேண்டும்.

தொட்டிகளில் விதைகளைப் போட்டு, தண்ணீர் விட்டு முளைக்க வைத்து அப்படியே வளர்க்கிற முறையைத்தான் பலரும் செய்கிறார்கள். இப்படி செய்வதைவிட விதைகளை தனியாக முளைக்க வைத்து நாற்றான பிறகு அதை எடுத்து தொட்டிகளிலோ வேறு வளர்ப்பிடத்திலோ நட்டு வளர்ப்பதுதான் செழிப்பான வளர்ச்சிக்கு உதவும்.

தொட்டிகளில் காய்கறிச் செடி, கொடி வளர்க்க நினைக்கிறபோது, கொஞ்சம் பெரிய தொட்டியாக வாங்குவது நல்லது. அப்போதுதான் செடிகளுக்குத் தேவையான உரத்தை நிரப்ப முடியும். மற்ற திட உரங்களைவிட மேலே சொன்ன விதத்தில் தயாராகும் ஆர்கானிக் உரம் மிகவும் லேசாக இருக்கும் என்பதால் நாற்றுகளை நடும்போது செடியோடு அணைத்த மாதிரி முட்டுக் கொடுக்க மண்ணில் சிறிய குச்சிகளைச் செருகிக் கொள்ள வேண்டும்.

விதைகளை நாற்றாக்க டிரேக்கள் கிடைக்கின்றன. முட்டை அடுக்கி வரும் டிரேக்களை வாங்கியும்கூட விதையை முளைக்க வைக்கப் பயன்படுத்தலாம்!

ஆர்கானிக் உரமானது தண்ணீரை தக்கவைத்துக் கொள்ளும் தன்மையோடு இருப்பதால், ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்றினால் போதும்.

தொட்டிகளில் நடுவதாயின் ஒரு தொட்டிக்கு ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் நட்டு வளர்க்கலாம். பிளாஸ்டிக் டிரேக்களில் என்றால் ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் 4 முதல் 6 அங்குல இடைவெளி இருக்கும்படி நடவேண்டும்!

செடிகள் பலன் தந்து முடிந்தபின் எடுத்துவிட்டு அடுத்து புதிதாக பயிரிடும்போது வெண்டைக்காய் பயிரான தொட்டியில் தக்காளி, தக்காளி பயிரான தொட்டியில் கத்தரி என மாற்றிப் பயிரிட்டால் செடிகள் செழிப்பாக வளரும்!

ஆர்கானிக் பூச்சி மருந்து எப்படி தயாரிப்பது?

இரண்டு கொத்து வேப்பிலை, 10 பல் பூண்டு, 5 பச்சைமிளகாய் சேர்த்து மைய அரைத்து, அய்ந்து லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டினால் குறைந்த செலவில் தரமான பூச்சி விரட்டி ரெடி! இதை அய்ந்து லிட்டர் தண்ணீரில் கலந்து 100க்கும் மேற்பட்ட செடி கொடிகளுக்கு தெளிப்பு செய்யலாம்.

வேப்பிலை, சாணம் இரண்டையும் காயவைத்து எரித்து, சாம்பலை செடிகளில் தூவி வந்தாலும் பூச்சிகள் அண்டாமல் செடி, கொடிகளை பாதுகாக்கலாம். கடைகளிலும் ரசாயனம் கலக்காத பூச்சி விரட்டி திரவங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, தேவையான தண்ணீர் கலந்து தெளிப்பு செய்யலாம். வீட்டிலேயும் தயாரிக்கலாம்.
-உண்மை,1-15.2.17