தொடரட்டும் உழவர் புரட்சி - தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி!
மூன்றாவது முறையாக வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை என்பது எங்குமில்லாத முன்னுதாரணம். விவசாயம் என்பது 'பாவ தொழில்' என்ற மனுதர்மத்திற்கு எதிராக விவசாய நலனில், விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த சுமார் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்' ஆட்சியில், தமிழ்நாடு பல துறைகளில் ஓர் ‘அமைதிப் புரட்சியை' சந்தித்து மகிழ்ந்து வருகிறது. வாழும் வயிற்றிற்கெல்லாம் சோறிடும் மிக இன்றியமை யாத துறைதான் வேளாண்மைத் துறை; அதுமட்டுமல்ல, மனித நாகரிகத்தின் திருப்பமும் வேளாண்மையே ஆகும்.
வேளாண் என்பது மனிதகுலத்தின்
வளர்ச்சிக்கு அடையாளம்!
காட்டுமிராண்டித்தனமாய் அலைந்து திரிந்து, உணவை வேட்டையாடிச் சேகரித்த தொடக்கால மனித குலம், பிறகு நாகரிகம் அடைந்ததின் அடையாளமே வேளாண்மைத் துறை.
மற்றவர்கள் நாடோடிகளாக (Nomadic) இருந்த நிலையை மாற்றி அவர்களை இருப்புக் கொள்ளச் செய்த புத்தாக்கம் தான் - நிலத்தை உழுது பயிரிட்டு மனித குலத்தைப் பட்டினியிலிருந்து பாதுகாத்துவரும் துறை வேளாண்மைத் துறை!
அத்துறையை மேலும் வளப்படுத்தி இன்றைய அறிவியல், மின்னணுவியல் வளர்ச்சியைப் புகுத்தி, புதிய ஆக்கப்பூர்வ சாதனைகளைச் செய்து, நமது வேளாண் பெருமக்களாக உள்ளவர்கள் ‘கடனிலே பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனிலேயே மறைந்து, தனக்குப் பின்வரும் சந்ததியினருக்கும் கடனையே' விட்டுச் செல்லும் பாரம்பரிய பரிதாப நிலைக்கு முடிவு கட்டி, தமிழ்நாட்டு வேளாண் பெருமக்களின் வாழ்வில் புதுவசந்தத்தை உருவாக்கவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முன் னெடுத்த குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று!
மூன்றாம் முறையாக வேளாண் பட்ஜெட்!
பொது பட்ஜெட்டிலிருந்து வேளாண்மையைத் தனியே பிரித்து, அதற்கென்று உள்ள வேளாண் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் 3 ஆவது முறையாக வேளாண்மைக்கான தனி பட் ஜெட்டை அளித்து, அத்துறையில் உள்ள நம் உழைக்கும் விவசாயிகள் அகமும் முகமும் மலர்ச்சி அடைய, பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி - முதலமைச்சர் வழிகாட்டுதல்மூலம் சாதனை படைத்து வரும் சரித்திரத்தில் பொன்னேடுகளைப் பதித்து வருகிறது ஆட்சி. அனைவரது வாழ்த்துகளும், பாராட்டுகளும் முதலமைச்சருக்கும், வேளாண் துறை அமைச்சருக்கும், ஒத்துழைத்தோருக்கும் உரியதாகும். ஓர் இனிய ஒன்பான் சுவை மிகுந்த உணவுபோல வேளாண் பெருமக்களுக்கு சமைத்துத் தந்துள்ளார் - பல முக்கிய வளர்ச்சித் திட்டங் களை அறிவித்தும் அவற்றிற்குரிய நிதி ஒதுக்கீடு செய்தும்!
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கிய உழவர் சந்தையால் உழவர்கள் பயன்பெற்றனர்; பொது மக்களும் இலாபம் அடைந்த நிலையை அறவே மறந்து, அரசியல் வன்மம் காரணமாக அந்த உழவர் சந்தையை மூடு விழா செய்தனர் - மூலையில் தள்ளப்பட்ட முந்தைய ஆட்சியினர்.
அவற்றைத் திறந்ததோடு, விரிவாக்கி, அங்கே கூடும் விவசாயிகள், விளைபொருள்களை வாங்கி மகிழும் மக்கள், பல்வேறு வசதிகளை - கிராமத்திலிருந்து வரும் வேளாண் பெருமக்களுக்கான உணவு விடுதி வசதி உள்பட செய்து தருவோம் என்ற அமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பும் நம் வேளாண் மக்களை, வளர்ந்துவரும் விவசாய நாடுகளுக்கு அழைத்துச் சென்று, புதிய அறிவியல் வளர்ச்சிகளைப் புரிந்து, புகுத்தி, தங்களையும், நாட்டினையும் வளர்ச்சிப் பாதை நோக்கி வேக நடை போட பல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டானது ஆகும்!
பாராட்டி எழுதுவதற்கு எண்ணற்ற அம்சங்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பலப்பல உள்ளன.
‘அகல உழுவதைவிட ஆழ உழுவதுமேல்' என் றொரு வேளாண் பழமொழி உண்டு. ஆழத்திலும், அகலத்திலும் இரண்டிலுமே உழுதுள்ளது இவ்வாண்டு இந்தப் பட்ஜெட்!
நமது ‘திராவிட மாடல்' ஆட்சியில் - இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2023-2024) செம்மொழி - எம்மொழியின் இலக்கிய மேற்கோள் மணம் வீசுகிறது!
ஒருபோதும் ‘‘பழைய பஞ்சாங்கமாய்'' வேளாண்மை விளங்காமல், மாறிவரும் அறிவியல், மின்னணுவியல் சூழலுக்கு ஏற்ப, அத்துறையில் அதிக வேகமான, நுட்ப மான தொழில்நுட்பவியலைப் புகுத்திடும் திட்டங்கள் எவரையும் திகைக்க வைக்கக் கூடியவை; திக்கெட்டும் ஆட்சியின் சாதனை என்ற புகழ் ஒளியைப் பாய்ச்சி பரப்பக் கூடியவை.
எத்தனை எத்தனை வளர்ச்சித் திட்டங்கள்!
1. சாகுபடி பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு
2. இரண்டு ஆண்டுகளில் 1.50 லட்சம் புதிய மின் இணைப்புகள்
3. பயிர்க் காப்பீட்டு மானியத்திற்கு 2,337 கோடி ரூபாய் ஒதுக்கீடு
4. தண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவ 450 கோடி ரூபாய்
5. நெல் குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத் தொகை
6. 10 லட்சம் குடும்பங்களுக்குப் பழச்செடிகள் வழங்கல்
7. எல்லாவற்றிற்கும் மேலாக உணவு தானிய உற்பத்தி 127 லட்சம் டன் இலக்கு
8. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் விருது!
‘திராவிட மாடல்' என்பது சமூகநீதி - வேளாண்மை மக்களுக்கு சமூகநீதியை பல வகைகளிலும் இந்த பட்ஜெட் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. பலரை தொழில் முனைவோர்களாக ஆக்கி, உயர்த்திட அடிக்கட்டுமானத்தை ஆழமாக்கிடும் தொலைநோக்குத் திட்டங்கள் இதில் துல்லியமாகப் பளிச்சிடுகின்றன!
மனுதர்மம் என்ன கூறுகிறது?
சனாதனத்தின் சாசனமான மனுதர்மத்தில் (அத்தி யாயம் 10; சுலோகம் 84)
‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக் கிறார்கள்; அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக் கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும், மண்வெட்டியும் பூமியையும், பூமியில் உண்டான பலப்பல ஜந்துக்களையும் வெட்டுகிற தல்லவா!''
இதைவிட பகுத்தறிவிற்கும், சமூக வளர்ச்சிக்கும் விரோதமான பிற்போக்குக் கருத்தும் கலாச்சாரமும் வேறு உண்டா?
திராவிடத் தத்துவம் சனாதனத்திற்கு நேர் விரோத மானது.
‘உழுதுண்டு வாழ்வோர் உலகத்தோர்க்கு அச்சாணி' என்பதுதானே அறிவுடன் கூடிய சுயமரியாதைக் கருத்து. (திராவிட கருத்தியல்). அந்த நமது ஒப்பற்ற பண்பாட் டினை உலகறியச் செய்ய வித்தூன்றி, வேளாண் துறை யில் ஓர் அமைதிப் புரட்சியுடன் தொடக்கம் - தொடரட்டும்!
தொடரட்டும் உழவர் புரட்சி!
‘‘பாராட்ட வார்த்தைகளே இல்லை'' என்று பகுத்தறிவு உள்ளோரும், வன்மம் இல்லாது வாழ்த்துவோரும் நிச்சயம் கூறும் வகையில் இப்பட்ஜெட் உள்ளது!
தொடரட்டும் உழவர் புரட்சி!
தொடரட்டும் ‘திராவிட மாடல்' ஆட்சி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.3.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக