புதன், 13 மார்ச், 2024

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பறவைகள் பலவிதம் (பறவைகள் கணக்கெடுப்பு’)

 

விடுதலை நாளேடு

பேராசிரியர் நம்.சீனிவாசன்

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகம் பச்சைப்பட்டு போர்த்திய பெரும் நிலம். எங்கு நோக்கினும் செடிகள், கொடிகள், மரங்கள்.
‘குயில் கூவிக் கொண்டிருக்கும்; மயில் ஆடிக் கொண்டிருக்கும்’ என்று இலக்கியத்தில் படித்ததை யெல்லாம் இங்கு கண்ணாரக் கண்டு களிக்கலாம்.
‘மெதுவாகச் செல்லவும்; மயில்கள் குறுக்கிடும்’ என்ற அறிவிப்புப் பலகை , இந்தப் பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு எங்கேயும் காண இயலாது.
ஓங்கி உயர்ந்த பெரு மரங்கள், தரத்தில் தேக்கு மரத்தை தோற்கடிக்கும் செம்மரங்கள், ஓயாது குரல் கொடுக்கும் மூங்கில் காடுகள், ததும்பி நிற்கும் நீர்நிலைகள் – இவையாவும் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே இயற்கையின் அருட்கொடையாய் அமைந்திருக்கின்றன.
வளாகத்தில் விரிந்து கிடக்கும் தாவரக் கூட்டங்களுக்கு மத்தியில் விலங்குக் கூட்டங்களும் உண்டு;
மரத்திற்கு மரம் குரங்குகள் தாவும்;
அணில்கள் சுதந்திரமாய் விளையாடும்;
முயல்கள் உற்சாகமாய் குதிக்கும்;
கீரிப்பிள்ளைகள் அவசரமாய் ஓடும்;
உடும்புகள் நடுங்காமல் ஊறும்.
ஆனால் அவற்றையெல்லாம் கணக்கெடுக்கவில்லை.
‘இது பறவைகள் கணக்கெடுப்பு’;
‘விலங்குகள் கணக்கெடுப்பு அல்ல’ – என்றார்கள் அரசு அதிகாரிகள்.
தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு 2024 மார்ச் மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
குமரிப்புறா,
மாங்குயில்,
கதிர்க்குருவி,
அரசவால் ஈப்பிடிப்பான்
எனும் நான்கு வகை அரிய பறவைகள் கண்டறி யப்பட்டன.
வியப்பும் மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்பட்டன.

பறவையியல் வல்லுநர்கள் கவனமாகக் கணக் கெடுத்தனர்.
50 வகை பறவை இனங்கள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பறவையின் பெயரையும் அறிவித்தனர்;
மொத்தம் 447 எண்ணிக்கைகள் இருப்பதாகக் கண்டறிந்து பதிவு செய்தனர்.
மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மிதிஷி உத்தரவின் பேரிலும்,
பல்கலைக்கழக துணைவேந்தர் இராமச்சந்திரன் அறிவுரையின் பேரிலும்,
ஈவெட் இயக்குநர் மற்றும் பறவையியல் அறிஞர் முனைவர் இராஜ சதீஷ்குமார் வழிநடத்துதலிலும்,
மேனாள் மாவட்ட வன அலுவலர் முனைவர் செல்வம் முன்னிலையிலும்,
வீரமணி – மோகனா வாழ்வியல் ஆய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் அசோக்குமார் ,

Director, Centre for energy environment and climate change , பேராசிரியர் கீர்த்தி வாசன், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, வனத்துறை அலுவலர்கள் இரஞ்சித், இளஞ்செழியன் ஆகியோருடன், இளம் பறவையியலாளர்கள் கண்மணி, செல்வின், சக்தி மற்றும் ஆர்வம்‌ கொண்ட மாணவ – மாணவியர்கள் 32 பேர் குழுவாக இணைந்து, பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக M.Sc., Biotechnology
M.Tech Environmental Engineering,
B.Tech Biotechnology ,
EEE மாணவியர்கள் கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.
பறவைக் கணக்கெடுப்பாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து,
02.03. 2024 மற்றும் 03.03.2024 ஆகிய இரண்டு நாட்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலையில் 6 மணிக்குத் தொடங்கி 9 மணி வரையிலும் மற்றும் மாலையில் 5 மணிக்குத் தொடங்கி 7 மணி வரையிலும் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.
1) மயில்= 13
2) மாடப்புறா =32
3) மணிப்புறா =5
4) செண்பகம் =4
5) சுடலை குயில் =1
6) குயில் =3
7) அக்கா குயில்=3
8) நாட்டு உழவாரன்=21
9) பனை உழவாரன்=8
10) செம் மூக்கு ஆள்காட்டி=2
11) சின்ன நீர் காகம்=2
12) இந்திய நீர் காகம்=2
13) சின்ன கொக்கு=21
14) மடையான்=10
15) வல்லூறு=2
16) கரும் பருந்து=3
17) வெண் மார்பு மீன் கொத்தி=2
18) கருப்பு வெள்ளை மீன் கொத்தி=1
19) சிறிய பஞ்சுருட்டான்=7
20) பனங்காடை=2
21) செம் மார்பு குக்கூறுவான்=12
22) பொன் முதுகு மரங்கொத்தி=2
23) பச்சைக்கிளி=32
24) மாங்குயில்=1
25) காட்டு கீச்சான் =1
26) கரிச்சான்=18
27) அரசவால் ஈ பிடிப்பான்=1
28) வால் காக்கை=11
29) காகம்=10
30) அண்டங்காக்கை=3
31) தையல் சிட்டு=12
32) சாம்பல் கதிர் குருவி=6
33) கதிர் குருவி=6
34) வெண்புருவ சின்னான் =4
35) சின்னான்=11
36) மைனா=25
37) கருஞ்சிட்டு=8
38) குண்டு கரிச்சான்=3
39) ஊதா தேன்சிட்டு=11
40) ஊர் தேன் சிட்டு=9
41) சிட்டுக்குருவி=17
42) கவுதாரி=3
43) வெண் புருவ வாலாட்டி=2
44) கருந்தலை மைனா=4
45) பழுப்பு கீச்சான்=35
46) செம்முக்கு பூங்குயில்=2
47) குமரி புறா=6
48) தவிட்டு குருவி =45
49) பெரிய தேன் சிட்டு=2
50) சிறிய நீல மீன் கொத்தி=1
50 இனங்களையும் கண்டு களித்து பதிவு செய்து பரவசம் அடைந்தனர்.
மொத்த பறவைகளின் எண்ணிக்கை=447
வானத்தில் போர் விமானங்கள் பறந்தால் அது மோசமான தேசம்;
பறவைகள் சிறகடித்தால் அது வாழ்வதற்கேற்ற வளமான நாடு.

மனிதனின் முதல் நண்பன் மரம்; மரத்தின் முதல் எதிரி மனிதன்.
பல்கலைக்கழகத்தில், மூங்கில் தோப்பிற்கு அருகேயுள்ள தென்னந்தோப்பில், அச்சமின்றி பச்சைக் கிளிகள் கூட்டம் கூட்டமாய் வாழ்கின்றன;
‘கீச் கீச் ‘ என்ற சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
பச்சைக்கிளிகள் வாழும் அப்பகுதியை மாணவர்கள்,
‘பசுங்கிளித் தோப்பு’ என்றே அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒரு கவிதையில் குறிப்பிடுவார்கள் :
“கிளி வளர்த்தேன் – பறந்து விட்டது;
அணில் வளர்த்தேன் – ஓடிவிட்டது;
மரம் வளர்த்தேன் – இரண்டும் வந்துவிட்டது”
என்று மரங்களின் அவசியத்தை நயமாய்ச் சொல்லி இருப்பார்.
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாய் வீடு காடுகளே ஆகும்.
பொதுவாகவே பல்கலைக் கழக வளாகப் பகுதியை,
‘தஞ்சையின் நுரையீரல்’
‘ பசுமைப் பள்ளத்தாக்கு’
என்றே சூழலியலாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்ற பறவையியல் வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது;
நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன; சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி மிதிஷி அனை வருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கி நன்றி தெரிவித்தார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இயற் கைச் சூழல் – பசுமைப் பரப்பு இந்தியப் பல்கலைக்கழக பல்வேறு அமைப்புகளின் பாராட்டுதல்களைப் பெற் றிருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் களும் அவர்களின் பெற்றோர்களும் மட்டுமல்லாமல், பொதுமக்களும் வியந்து பாராட்டும் வகையில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக