வியாழன், 28 ஜூன், 2018

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்,

இது ஒரு எச்சரிக்கை பதிவு படித்துவிட்டு கட்டாயமாக பகிருங்கள் தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
இனிக்கும் செய்தியல்ல!

தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?

முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''

''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஒரு பொறியாளரின் பார்வையில் ஏரியை ஏன் தூர் வாரவேண்டும்? எப்படித் தூர் வாரவேண்டும்?

சுமார் 60 வருடங்களுக்கு முன் தொடர்ந்து ஒரு மாதம் மழை பெய்தாலும் ஏரி நிரம்பி வழியாது. ஏரிக்குள் வந்த நீர் ஊற்றுக்கண்கள் மூலம் நிலத்தடி நீரைச் சென்றடையும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துக் கொண்டேயிருக்கும்.


ஆனால் இப்போது 60 வருடங்களாக தூர் வாராததால் ஏரியின் வயிற்றுப் பகுதி இறுகி இரும்பாகிவிட்டது. இரண்டு நாள் மழையிலேயே ஏரி பொய்யாக நிரம்பி வழிகிறது. நிலத்தடி நீர் உயராமல் தாழ்ந்து கொண்டே செல்கிறது. மழை நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதனால் ஏரியைத் தூர் வாரி புனரமைக்க வேண்டும்.

வரத்து வாய்க்கால்களையும் தூர் வாரி புனரமைக்க வேண்டும்

இனி எப்படித் தூர் வாரவேண்டும் என்பதைப் பார்ப்போம்

ஒரேக் கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல

ஏரியை தன் நிலைக்குக் கொண்டுவர...

1) ஏரி தன் கொள்ளவில் 30% அளவிற்கு தூர் நிறைந்துவிட்டது - தூர் வாரி மண்ணை வெளியே எடுத்துச் செல்லாமல் ஏரியின் மய்யப் பகுதியில் கொட்டி மேடுறுத்தி தீவாக உருவாக்க வேண்டும். அதன் மேல் மட்டத்தை ஏரியின் நீர்ப்பிடிப்பு மட்டத்திற்கு மேல் ஆறு அடியாக உயர்த்த வேண்டும். நீர்ப் பிடிப்பு, மட்டத்தின் மேலுள்ள மண்ணின் கொள்ளவே 30% தூர் வாரிய மண் ஆகும்.

உருவாக்கியத் தீவில் மரக்கன்றுகளை 20 அடிகள் இடைவெளியில் நட்டு ஒரு தோப்பை உருவாக்க வேண்டும்.

திட்டத்தை செயல்படுத்த, ஏரியின் உட்பகுதியில் (மய்யத்தில்) மூன்றில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றி லும் அகழியை (100 அடி முதல் 200 அடி ‘அகலத்திலும் 3 அடி முதல் 6 அடி ஆழத் திலும்) தோண்டி எடுத்த மண்ணை அகழி யின் உட்புறத்தில் கொட்ட வேண்டும். கொட்டும்போது அடுக்கு முறையில் கொட்டி மேடாக்கவேண்டும். அதன் மேல்மட்டம் நீர்ப் பிடிப்பு மட்டத்திற்கு மேல் ஆறு அடியாக இருக்கச் செய்ய வேண்டும். இப்போது நமக்கு ஒரு தீவு கிடைத்துவிடும் அதன் மீது பயன் தரும் மரக்கன்றுகளை (ஆல், அரசு. புளி, விளா, வேப்பம், வில்வம், நெல்லி, தென்னை மற்றும் மா ஆகியவை களை தக்க விகிதத்தில்) நட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். தோண்டிய மண்ணில் ஒரு பகுதியை பயன் படுத்தி ஏரிக்கரையை பலப் படுத்தி அதன் இரு புறத்திலும் பனைமரக் கன்றுகளை எட்டடி இடை வெளிகளில் நட வேண்டும். இதே போல தமிழ் நாட்டிலுள்ள சுமார் 43,000 ஏரிகளை புனரமைத்தால், தமிழ் நாட் டில் கிடைக்கும் மழை நீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறையைக் கற்று விவ சாயத்தை வெற்றிகரமாக செய்யலாம்.

ஏரிகளை புனரமைத்த பிறகு, அதன் காரணமாக உயரும் நிலத்தடி நிலவரங் களை மக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் மக் களே முன்வந்து ஏரியைப் பராமரிப்பார்கள். நமக்குக் கிடைக்கும் காவிரி நீர் குறைந் தாலும் கவலைப் படவேண்டாம்.

தோப்பின் மூலம் பறவைகள் எண் ணிக்கை பெருகும்.அகழியில் தேங்கி நிற்கும் நீரினால் மீன் வளம் பெருகும். நீர் ஏற்ற செலவாகும் மின்சார செலவு குறை யும்.

(பொறியாளர் பரசு.சண்முகம்
கடலூர்)

- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18

புதன், 10 ஜனவரி, 2018

தமிழக ஆறுகளின் கணக்கு


கடலூர்    -    தென்பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு,         
பரவனாறு, வெள்ளாறு, கோமுகி ஆறு, மணிமுத்தாறு, ஓங்கூர் ஆறு

விழுப்புரம்    -    கோமுகி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு

காஞ்சிபுரம்     -    அடையாறு, செய்யாறு, பாலாறு, வராகநதி, தென்பெண்ணை, பரவனாறு

திருவண்ணாமலை    -    தென்பெண்ணை, செய்யாறு, வராகநதி, வெள்ளாறு.

திருவள்ளூர்     -    கூவம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு

கரூர்    -    அமராவதி, பொன்னை.

திருச்சி    -    காவிரி, கொள்ளிடம், பொன்னை, பாம்பாறு.

பெரம்பலூர்    -    கொள்ளிடம்.

தஞ்சாவூர்     -    காவிரி, வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், அக்கினி ஆறு.

சிவகங்கை     -    வைகையாறு, பாம்பாறு, குண்டாறு, கிருதுமால் நதி,

திருவாரூர்    -    காவிரி, வெண்ணாறு, பாமணியாறு, குடமுருட்டி

நாகப்பட்டினம்    -    காவிரி, வெண்ணாறு.

தூத்துக்குடி     -    ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி, குண்டாறு, கிருதுமால் ஆறு, கல்லாறு, கோராம்பள்ளம் ஆறு.

தேனி     -    வைகையாறு, சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு, வைரவனாறு.

கோயம்புத்தூர்    -    சிறுவாணி, அமராவதி, பவானி, நொய்யலாறு, பம்பாறு.

திருநெல்வேலி    -    தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு, இராமநதி, மணிமுத்தாறு, பச்சை ஆறு, கறுப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடிஆறு, அனுமாநதி, கருமேனியாறு, கரமணை ஆறு. இவை தவிர, தாமிரபரணியின் துணை ஆறுகளான சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு, நாகமலையாறு, காட்டாறு, சோம்பனாறு, கவுதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பையாறு, குண்டாறு போன்றவையும் ஓடுகின்றன.

மதுரை    -    பெரியாறு, வைகையாறு, குண்டாறு, கிருதுமால் நதி, சுள்ளி ஆறு, வைரவனாறு, தேனியாறு, வரட்டாறு, நாகலாறு, வராகநதி, மஞ்சள் ஆறு, மருதாநதி, சிறுமலையாறு, சுத்தி ஆறு, உப்பு ஆறு.

திண்டுக்கல்    -    பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி, சண்முகாநதி, நங்கட்சியாறு, குடகனாறு, குதிரையாறு, பாலாறு, புரந்தலாறு, பொன்னை, பாம்பாறு, மஞ்சள் ஆறு.

கன்னியாகுமரி    -    கோதையாறு, பறளியாறு, பழையாறு, நெய்யாறு, வள்ளியாறு.

ராமநாதபுரம்    -    குண்டாறு, கிருதுமால் நதி, வைகை, பாம்பாறு, கோட்டகரையாறு, உத்திரகோசமங்கை ஆறு.

தருமபுரி     -    காவிரி, தொப்பையாறு, தென்பெண்ணை

சேலம்     -    காவிரி, வசிட்டாநதி, வெள்ளாறு.

விருதுநகர்    -    கவுசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனா நதி, கிருதுமால் நதி.

நாமக்கல்    -    காவிரி, உப்பாறு, நொய்யலாறு.

ஈரோடு    -    காவிரி, பவானி, உப்பாறு.

திருப்பூர்    -    நொய்யலாறு, அமராவதி, குதிரையாறு.

புதுக்கோட்டை    -    அக்கினி ஆறு, அம்பூலி ஆறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு, கோட்டகரையாறு. 

நதிகளைத் தவிர்த்து தமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும்  அணைகளாவது, இன்னும் நதிகளின் நீட்சியைப் போலவே நதிகளின் பட்டியலும் நீண்டு கொண்டே இருக்கின்றது. 

¨    வராக நதி படுகையில், வீடூர்

¨    பெண்ணையாறு படுகையில் கிருஷ்ணகிரி, சாத்தனூர், தும்பஹள்ளி, பாம்பார், வாணியாறு 

¨    வெள்ளாறு நதிப் படுகையில் வெல்லிங்டன், மணிமுக்தா நதி, கோமுகி நதி 

¨    காவேரி நதிப் படுகையில் மேட்டூர், சின்னாறு, சேகரி குளிஹல்லா, நாகவதி, தொப்பையாறு, பவானி சாகர், குண்டேரி பள்ளம், வரட்டுப் பள்ளம், அமராவதி, பாலாறு, புரந்தலாறு, வரதமா நதி, உப்பாறு (பெரியாறு மாவட்டம்), வட்டமலைக் கரை ஓடை, பரப்பலாறு, பொன்னையாறு, உப்பார் (திருச்சி மாவட்டம்)

¨    வைகை நதிப் படுகையில் வைகை, மஞ்சளாறு, மருதா நதி

¨    வைப்பார் நதிப் படுகையில் பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்), பிளவுக்கல் (கோவிலாறு நீர்த்தேக்கம்), வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம், குள்ளுர் சந்தை, 

¨    தாமிரபரணி நதிப் படுகையில் மணிமுத்தாறு, கடனா, ராம நதி, கருப்பா நதி, குண்டாறு

¨    கோதையாறு நதிப் படுகையில் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, சித்தாறு 1, சித்தாறு 2, மேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதலில் பெரியாறு நதிப் படுகையில் பெரியாறு, மேல் நீராறு அணைக்கட்டு, கீழ் நீராறு

¨    சாலைக்குடி நதிப்படுகையில் சோலையாறு, பரம்பிக்குளம், தூனக்கடவு, பெருவாரிப் பள்ளம்

¨    பாரதப் புழை நதிப் படுகையில் ஆழியாறு, திருமூர்த்தி என நீர்த்தேக்கங்களையும் வரிசைப்படுத்தலாம். இருக்கின்ற இந்த நீர் நிலைகளை முறையாக ஒவ்வொரு ஆண்டும்தொடர்ந்து தூர் வாருவதோடு மதகுகளை முறையாக பழுது பார்த்து நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுத்து பராமரித்து வந்தால் நீர் நிலைகளின் பயன்பாடு அதிகரித்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் இருக்காது என்பதில் மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது!

- விடுதலை ஞாயிறு மலர், 30.12.17

புதன், 7 ஜூன், 2017

19 ரூபாய் செலவில் 8 கிலோ பசுந்தீவனம்

வறட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் வளர்க்கும் முறையில் ரூ.19 செலவில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை ஏழு நாட்களில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, கோடை வெப்பமும் உக்கிரமாக உள்ள நிலையில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

குறைந்த பரப்பில் பசுந்தீவனம்

வறட்சி காரணமாக விவசாயச் சார்புத் தொழிலான கால்நடைத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கால்நடைகளுக்குப் பசுந்தீவனத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், பல விவசாயிகள் கால்நடைகளைச் சந்தையில் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, வறட்சி காலத்தில் மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு (ஹைட்ரோபோனிக்ஸ்) முறையைக் கால்நடைத் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மூன்று அடி அகலம் ஆறு அடி உயரம் கொண்ட சிறிய அறையில் பசுந்தீவனம் விதையிட்டு ஏழு நாட்களில் எட்டு கிலே பசுந்தீவனத்தை அறுவடை செய்து பயன்பெறலாம். இது குறித்துச் சேலம் கால்நடைத் துறை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் ஜெயந்தி கூறியதாவது:

கோடை தொடங்கும் முன்னரே நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வறட்சியின் பிடியில் விவசாய நிலங்கள் சிக்கியுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையும், கடும் வெயிலும் கைகோத்துக் கொண்ட நிலையில், தீவன வளர்ப்பு அபூர்வமாகிவிட்டது. கோடை வறட்சிக்குத் தாக்குப்பிடித்து, கால்நடைகளுக்குத் தீவனம் வழங்கும் விதமாக, மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு முறையை அறிமுகம் செய்துள்ளேம்.

மக்காச்சோள இலைகள்

மக்காச்சோள விதையை 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஃபாடர் மிஷின் மூலம் மக்காச்சோளம் விதையை 15 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ்வரை வெப்பப்படுத்தி, 60 சதவீதம் முதல் 70 சதவீதம் ஈரப்பதமாக்க வேண்டும். இவற்றைச் சாக்குப் பைகளில் போட்டு, தண்ணீர் தெளித்தபடி இருந்தால், மூன்று-நான்கு நாட்களில் முளைவிட்டுப் பயிர் வளர ஆரம்பிக்கும்.

பின்னர்த் தனித்தனி அடுக்குகளில் டிரேவில் வைத்து முளைவிட்ட பயிருக்குத் தண்ணீர் ஊற்றிவந்தால், ஏழு நாட்களில் எட்டு கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு மூன்றரை லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ விதை ரூ.19 செலவும் செய்தால், ரூ.64 மதிப்புள்ள எட்டு கிலோ பசுந்தீவனத்தைப் பெற முடியும். இந்த முறையை மாநிலம் முழுவதும் பரவலாக்க விவசாயிகளிடம் கால்நடைத் துறை மற்றும் வேளாண் துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்றார்.

மானிய விலையில் இயந்திரம் தேவை

பசுந்தீவன வளர்ப்பு தொடர்பாகச் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த அபிநவம் கிராம விவசாயி ஜெயராமன் கூறியதாவது:

மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறை அருமையான திட்டம். இதற்கான இயந்திரம் ரூ.61 ஆயிரம். இதை மானிய விலையில் விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலம் குறைந்த இடத்தில், மலிவு விலையில் விவசாயிகள் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து மூன்று மாடு, 30 ஆடுகளுக்குப் பற்றாக்குறையில்லாமல் வழங்க முடியும். கிலோ எட்டு ரூபாய் கொடுத்து வைக்கோல் வாங்கும் நிலையில், வெறும் நான்கு ரூபாய் செலவில் தினசரி எட்டு கிலோ தீவனம் கிடைப்பது வரவேற்புக்குரியது.

கால்நடைத் துறை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத் தொடர்புக்கு: 9629986159
-உண்மை இதழ்,1-15-5.17

 


ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

சோலார் விளக்கும் பூச்சியை விலக்கும்




கெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்க சோலார் விளக்குப்பொறி உருவாக்கப்பட்டுள்ளது
சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் விவசாய நிலங்களில் பூச்சி மேலாண்மைக்காக சோலார் விளக்குப்பொறியை உருவாக்கியுள்ளனர் புதுவை சாப்ஸ் (SAFS) வேளாண் நிறுவன விஞ்ஞானிகள். அது குறித்த விவரங்களை விவரிக்கிறார், சாப்ஸ் வேளாண் நிறுவனத்தின் நிறுவனர் அப்துல் காதர்...
வயலில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகக் கண்டறிந்த முறைதான் இந்த சோலார் விளக்குப்பொறி. இயற்கை முறையில் இதன் மூலம் பூச்சிகளைக் கட்டுபடுத்தலாம்.
முற்றிலும் சூரிய ஒளியில் தானியங்கி முறையில் இந்த சோலார் விளக்குப்பொறியை வடிவமைத்து உள்ளோம்.
அதிலும் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அவை முழுத் திறனுடன் பயிர்களை அழிக்கும் நேரத்தைத் தெரிந்து அதற்கேற்றாற்போல சோலார் விளக்குப் பொறியை வடிவமைத்து உள்ளோம். பூச்சியியல் நிபுணர் முனைவர் வைத்தியலிங்கத்தின் உதவியுடன் சூரியன் மறைகின்ற நேரம் முதல் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் செயல்படும் விதமாக இந்தக் கருவியை மைக்ரோ கண்ட்ரோல் போர்டு மூலம் வடிவமைத்தோம். இதில் சூரிய சக்தியை சேமிக்க பேட்டரிகள் உள்ளன.
இந்தச் சோலார் விளக்குப் பொறியை தோட்டப்பயிர்கள், காய்கறிப் பயிர்கள், நெல் எண்ணெய் வித்துப் பயிர்கள், மலைத் தோட்டப் பயிர்கள், என அனைத்திற்கும் பயன்படுத்தலாம். தேவையான இடத்திற்கு இக்கருவியை எளிதில் மாற்றலாம்.
தாய் அந்துப் பூச்சிகள் காய் துளைப்பான், பழம் துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, வெள்ளை ஈ, வண்டுகள் முதலியவற்றை இந்த விளக்குப்பொறியின் மூலம் கட்டுப்படுத்தலாம். 85 சதவிகிதம் தீமை செய்யும் பூச்சிகளே இக்கருவியில் விழுகின்றன. நன்மை செய்யும் பூச்சிகள் விடிகாலைப் பொழுதில் அதிகம் வரும்.
சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூச்சிகளை இந்த விளக்குப்பொறியின் மூலம் கட்டுப்படுத்தலாம். தற்போது விவசாயிகளுக்கு இக்கருவியை 2,625 ரூபாய்க்கு விற்பனை செய்துவருகிறோம். இதே தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சார பேட்டரியின் மூலம் செயல்படக் கூடிய விளக்குப் பொறியையும் உருவாக்கி, தற்போது 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம் என்கிறார்.

கடந்த பருவத்தில் கத்தரிப் பயிர் செய்திருந்தேன், இந்தச் சோலார் விளக்குப் பொறியை அதில் பயன்படுத்தியதன் மூலம் பூச்சிக்கொல்லிகளுக்குச் செலவிடும் தொகையில் 75 சதவிகிதத்தைக் குறைத்துள்ளேன். விளைச்சலும் அதிகரித்துள்ளது என்கிறார், பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

-உண்மை இதழ்,1-15.9.15