சனி, 3 செப்டம்பர், 2016

வேளாண்மையில் பூச்சிக் கொல்லியாகப் பயன்படும் சாராயம்!

தேவைகளின் உச்சமே கண்டுபிடிப்புகளின் தோற்றமாகும். இதை மெய்ப்பிக்கும் விதமாக மகாராஷ்ட்டிர மாநில விவசாயிகள் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை விரட்டுவதில், பயிர்களைக் காப்பதில் தாங்கள் சந்தித்துவரும் இடர்பாடுகளிலிருந்து விடுதலை பெற முயன்றதன் விளைவாக, சாராயத்தால் இத்தொல்லைக்கு விடிவு கிடைக்கும் என்பதைக் கண்டிருக்கின்றனர். இராசாயன உரங்களின் அபரிமிதமான உபயோகத்தால், நிலம் தன் நல்லியல்பு குன்றி, குறைந்த அளவே விளைச்சல் தரும் சூழலையும் மாற்றிடும் இயல்பு சாராயத்திற்கு உண்டு என்பதை அனுபவ வாயிலாக அறிந்து பயனடைந்து வருகின்றனர்.


நாட்டு சாராயம், கள்ளு, மற்றும் மஹா என்னும்படியான போதைப் பானம் ஆகியவற்றில் ஒன்றை 100லிருந்து 120 மி.லி. வரை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து, தாவரங்கள் பூத்துப் பலன் கொடுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவற்றின் மீது தெளித்தால், அது பூச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதோடு, தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஜிப்ராலிக் அமிலச் சுரப்பைத் தூண்டுவதால், வளர்ச்சியுடன் நல்ல விளைச்சலையும் தருகிறது என்பதைக் கண்கூடாகக் கண்டுள்ளனர்.

பூச்சிக்கொல்லிகளுக்கு நல்ல மாற்றாக இந்த (ஆல்கஹால்) சாராயம் உதவுகிறது என்று விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு 10 அல்ல 12 முறை பூச்சிக்கொல்லிகளை தெளிக்க பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகின்றது. ஆனால், சாராயக்கலவை ஒரு குடுவை 180 மிலி ரூபாய் 25 முதல் 30க்குள் அடக்கமாகி விடுவதோடு விவசாயிகளுக்கு சுலபமாகவும் கிடைத்துவிடுகிறது.

மகாராட்டிர மாநிலத்தில் லாத்தூர், அஸ்மணாபாத், நான்டெட் பிரபாணி, யுவமால் மற்றும் பீட் மாவட்டங்களில் இம்முறை பரவலாக உபயோகத்தில் உள்ளது.

ஆதாரம்: ‘Open’ 21.3.2016 தகவல்: கெ.நா.சாமி
-உண்மை இதழ்,1-15.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக