செவ்வாய், 7 ஜூன், 2016

விளைச்சலுக்கு உதவும் நுண்ணுயிரிகள்


உலக மக்கள் தொகை, இன்று, 740 கோடி. இது, வரும், 2050க்குள் மேலும், 200 கோடி கூடிவிடும். இந்த கூடுதல், 200 கோடி பேருக்கு தேவையான உணவு பயிர்கள் தேவை என்றால், பயிர் உற்பத்தி, 70 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை பெருகியிருக்க வேண்டும். ஆனால், தற்போது ஆண்டுக்கு, 1 சதவீதம் மட்டுமே பயிர் உற்பத்தி கூடி வருகிறது.
அழியும் நுண்ணுயிரிகள் பயிர் உற்பத்தியை பெருக்குவதற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் போன்றவை தரும் பலன்களைவிட, உபத்திரவங்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு வேறு பல மாற்று வழிகளை, விவசாய விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர். அதில் ஒன்று தான் நுண்ணுயிரிகள். மனிதனின் உடலில், 3 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவற்றில் கணிசமானவை, உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. இதேபோல தான் தாவரங்கள் செழிக்கவும், பல நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் அழிக்கப்பட்டு விடுகின்றன.
இதை தடுக்க, விதையிலேயே, நல்ல நுண்ணுயிரிகள் கொண்ட திரவத்தை பூசிவிட்டால் என்ன என்று, அமெரிக்காவிலுள்ள இண்டிகோ நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது. ‘’தாவரங்களுக்கு உதவும் நல்ல நுண்ணுயிரிகளில், 40 ஆயிரம் நுண்ணுயிரிகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். இவற்றில் பல, இப்போது பரவலாக அழித்தொழிக்கப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும் உயிர்ப்பித்து விதைகளின் மேல் பூசி விடுவோம்,’’ என்கிறார், இண்டிகோவின் தலைவர் டேவிட் பெர்ரி.
விதைகள் மீது பூச்சு: தாவரம் சார்ந்த நுண்ணுயிரிகளை, இதற்கு முன் பலர் ஆராயந்துள்ளனர். என்றாலும், அவர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிரி களையே ஆராய்ந்தனர். ஆனால், இண்டிகோ போன்ற சில நிறுவனங்களே, தாவரங்களுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகளை ஆராய்கின்றன.நுண்ணுயிரி பூச்சு செய்யப்பட்ட விதைகள், முளைவிடும்போதே அவற்றின் நற்பயன்களை அனுபவித்து வளர்கின்றன. விளைச்சலும், 10 சதவீதம் அதிகம் கிடைப்பதாக இண்டிகோ தெரிவிக்கிறது.
தவிர, நுண்ணுயிரியில் ஊறி வளரும் பயிர்கள், அதிக உப்புள்ள மண், சூடான பருவநிலை போன்றவற்றை சுதாரித்து வளர்வதோடு, குறைந்த நீர் இருந்தாலும் நல்ல வளர்ச்சி காண்கின்றன.விவசாய நாடான இந்தியாவிலும் இந்த முறை பின்பற்றப்பட்டால், உணவு உற்பத்தி நிச்சயம் விண்ணைத் தொடும்.
-விடுதலை,24.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக