சுண்டைக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரே செடியில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி ஆகிய 3 காய்களை விளை வித்து புதுச்சேரியைச் சேர்ந்த தந்தை-மகள் சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த கூடப்பாக் கத்தைச் சேர்ந்தவர் டி.வெங்கடபதி. இவர், விவசாயத்தில் ஆராய்ச்சி செய்து, கனகாம்பரம் பூ செடிகளில் பல்வேறு ரகங்களை உருவாக்கி உள்ளார்.
இப்போது அனைத்து நிலங்களுக்கும் ஏற்ற வகையிலான சவுக்கு ரகங்களை உருவாக்கிக் கொடுத்து வருகிறார். சாகுபடியில் விவசாயிகள் லாபம் ஈட்டும் வகையில் பல்வேறு புதிய ரகங்களை உருவாக் கிக் கொண்டே இருக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பங் களை கற்றுக் கொண்டு, அதைச் செயல்படுத்துகிறார்.
இவரது சேவைக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இவரை டில்லிக்கு வரவழைத்து பாராட்டியுள்ளார். இவரது ஆராய்ச்சிகளின் வழிமுறைகளும், ஆராய்ச்சிகளின் முடிவுகளும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இவரது விவசாய சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மசிறீ விருதும் வழங்கி உள்ளது.
ஒரே செடியில் 3 காய்கள்: அணுக்கதிர் வீச்சு மூலம் செடிகளை உருவாக்கி வரும் வெங்கடபதி, இதற்காக கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குச் சென்று நவீன ரக செடி வகைகளை உருவாக்கி வருகிறார். தற்போது சுண்டைக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரே செடியில் கத்தரி, மிளகாய், தக்காளி விளைவித்துள்ளார். கலாம் கத்தரி, மோடி மிளகாய், சோனியா தக்காளி என அவற்றுக்கு பெயரிட்டுள்ளார்.
கத்தரி செடியின் ஆயுள் காலம் 6 மாதம். மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் தாக்கி வேர்கள் அழுகி செடிகள் இறக்கின்றன. 6 மாத கத்தரி செடியில் இதன் மகசூல் 4 முதல் 8 கிலோ மட்டும் கிடைக்கும். இதனால் இவற்றை நவீன ரக ஆய்வின் மூலம் உருவாக்கி உள்ளார்.
தந்தைக்கு உதவும் மகள்: இவரது மகள் ஸ்ரீலட்சுமியும் 7 வயது முதலே தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். உயர்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கத்தரியை உருவாக்கி உள்ளார். இதுகுறித்து வேங்கடபதி, அவரது மகள் சிறீலட்சுமி ஆகியோர் கூறியதாவது:
சுண்டக்காயில் பல வகைகள் உள்ளன. முதலில் ஜப்பான், கொரியா, நாடுகளில் தான் இதன் தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் காய்க்கும் இனத்தில் வேர்ச் செடியாக வைத்து கத்தரி செடிகளை ஒட்டுமுறையில் வளர்க்கின்றனர்.
இதற்காக சுண்டைக்காய் செடியை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காமா கதிர்வீச்சு செலுத்தி சோதித்தபோது, காய் காய்க்காத இனம் உருவாகியது. இதில் செடிகள் வீரியமாக வளர்கின்றன. அவற்றில் கத்தரி இனத்தை ஒட்டு வைத்து பார்த்த போது, மிக வேகமாக வளர்ந்தன. இதன் மூலம் 6 மாதங்களில் 12 முதல் 18 கிலோ வரை காய்கள் கிடைத்தன.
இவற்றின் ஆயுள் காலம் 3 ஆண்டுகள் ஆகும். வேர்ச் செடி ஆதலால் எந்த நோயும் தாக்காது. மேலும் காய்க்காத சுண்டைக்காய் செடியில் ஒட்டு முறையில் 3 விதமான காய்கள் கத்தரி, மிளகாய், தக்காளி விளைவித்து சோதனை செய்துள்ளோம். இவை மூன்றும் ஒரே வகையான குடும்பம் என்பதால் 3 இனங்களும் சுண்டைக் காயில் ஒட்டி வளர்கிறது.
காய்கள் காய்க்காத சுண்டைக்காய் இனத்தை நாங்கள் வடிவமைத் துள்ளோம். அதன் சக்தி செடிகள் வளர்வதற்கே பயன்படுகிறது எனத் தெரிவித்தனர்.
-விடுதலை ஞா.ம.,19.3.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக