• Viduthalai
மிகவும் சிக்கலான மரபணு அமைப்பைக் கொண்டது கரும்பு. எனவே, கரும்பு ரகங்களை கலப்பு செய்து, நமக்கு வேண்டாத கூறுகளை நீக்கி, வேண்டிய அம்சங்களை மட்டும் கொண்ட புதிய ரகங்களை உருவாக்குவது கடினம். அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.
எனவேதான், 'கிரிஸ்பர்' என்ற மரபணு திருத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பில் வீரிய ஒட்டு ரகத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். பிரபலமான மரபணு திருத்த கருவியான கிரிஸ்பரை, கரும்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது இதுவே முதல் முறை. அமெரிக்காவிலுள்ள புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கரும்பின் தோற்றத்தில் இரண்டு மாற்றங்களை உருவாக்க முடிகிறதா என்று ஆராய்ந்தனர்.
இதன் மூலம் கிரிஸ்பர் தொழில்நுட்பம், கரும்பின் மரபணுவை, துல்லியமாக கையாள உதவுகிறதா என்று அறிவதே அவர்களது நோக்கம். அண்மையில் அந்த இரு ஆய்வுகளுக்கும் வெற்றி கிடைத்துள்ளது.முதல் ஆய்வில், கரும்புத் தோகையின் நிறத்தை வெளிர் பச்சை நிறத்திற்கு மாற்றுவதில் புளோரிடா விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். இதன் மூலம், குறைவான உரங்களை உள்வாங்கி, நிறைய எடையை கொடுக்கும் கரும்பு கிடைத்தது.
இரண்டாவது ஆய்வில், கிரிஸ்பர் தொழில்நுட்பம் மூலம், குறைவான பூச்சி மருந்து தேவைப்படும் விதத்தில் மாற்ற முடியுமா என சோதித்தனர்.அதிலும் திட்டவட்டமான வெற்றி கிடைத்துள்ளது. கரும்புப் பயிருக்காக காடுகள் அழிக்கப்படுவது முதல், அறுவடைக்குப பிறகு தோகை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவது வரை பல சூழியல் கேடுகளுக்கு கரும்பு காரணமாக இருக்கிறது. எனவே, கிரிஸ்பர் மூலம் அந்த குறைகளை போக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக