சனி, 14 நவம்பர், 2015

எல்லாமே இருக்கு நம் விவசாயத்தில்!


பூட்டன், பாட்டன், தந்தை இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் செய்துவந்த விவசாயத்தை நாம் ஏன் புறக்கணித்தோம் என்ற கேள்வி திவ்யாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. எம்.பி.ஏ., முடித்து விட்டு மாதம் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் சம்பாதித்த திவ்யாவை விவசாயத்தை நோக்கித் திருப்பியது எது?
திவ்யாவின் சொந்த ஊர், சென்னிமலையை அடுத்த கவுண்டன்பாளையம். அப்பா வாசுதேவனுக்கு விவசாயமும் வியாபாராமும் தொழில். அம்மா சுசீலா, இல்லத்தரசி. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஆறரை ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார் திவ்யா. கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் ஏதோ ஒரு போதாமை உணர்வு அவரது மனதுக்குள் நெருடிக்கொண்டே இருந்தது.
அப்பாவுக்கு வியாபாரத்தில் ஆயிரம்தான் வருமானம் வந்தாலும் எங்க தென்னந்தோப்புல இருந்து கிடைச்ச வருமானத்தைதான் என் படிப்பு செலவுக்குக் கொடுப்பார். ஒரு நாள் அதைப் பத்தி யோசிச்சப்பதான் விவசாய வருமானம் எவ்வளவு தனித்துவமானதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
நாமளும் விவசாயத் துறையில ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நாலு மாசம் ஒரு பயோ டெக் கம்பெனியில வேலை பார்த்தி ருந்ததால, விவசாயத்தைப் பத்தியும் விவசாயிகளோட நிலை பத்தியும் என்னால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது என்று சொல்லும் திவ்யா, தான் பார்த்துவந்த வேலையைத் துறந்தார்.
கோயம்புத்தூரில் விவசாய ஆலோசனை மய்யம் தொடங்கும் திவ்யாவின் முடிவுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு.
என்னோட இந்த முடிவை எல்லாருமே எதிர்த்தாங்க. ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்த்த நீ, சேத்துல இறங்கி வேலை செய்வியா?ன்னு என் கணவரே கேட்டார் - சொல்லும்போதே சிரிப்பு பொங்குகிறது திவ்யாவுக்கு. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்திவிட்டு தன் வேலைக்கான அடுத்த கட்டப் பணியில் இறங்கினார்.
பெண்களால் இயங்கும் மய்யம்
இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த ஆலோசனை மய்யத்தின் ஆலோசகர்களாக இருக்கிறார்கள். பல மாநிலங்களில் இருக்கும் இயற்கை வேளாண் இடுபொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார் திவ்யா. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டது திவ்யாவின் வேளாண் அறிவை விசாலமாக்கியது.
விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கவும், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் இங்கே விவசாய மருத்துவர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்கப் பெண் ஊழியர்களைக் கொண்டு செயல்படுவது இந்த மய்யத்தின் இன்னொரு சிறப்பம்சம்!
-விடுதலை,10.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக