திங்கள், 5 செப்டம்பர், 2016

வீட்டுக்கு வீடு தோட்டம்....

நடுத்தர வருவாய் பெறும் மக் களிடையே இன்றைய மிகவும் முக்கிய தேவையான தினசரி காய்கறிகள் வாங்குவது பெரும் சுமையாக உள்ளது. சந்தையில் காய்கறி வரத்து இல்லாத காலத்தில் விலை சற்று அதிகரித்தும் வரவு அதிகம் உள்ள நிலையில் மிகவும் குறைந்த விலையில் விற்கும். ஆனால், சில ஆண்டுகளாக அன்றாடம் உணவுப் பொருளில் பயன்படும் காய்கறிகளின் விலை ஏறிய வண்ணமே உள்ளது. குறையும்போது மிகவும் குறைந்த பட்சமே குறைந்து விரைவில் மீண்டும் விலை ஏறிவிடுகிறது.
முக்கியமாக சேமிப்பில் சிறந்து விளங்கும் பெண்கள் காய்கறி விலையேற்றத்தின் காரணமாக சேமிக்கவழியில்லாமல் அவசரத் தேவைக்கு பணமின்றி திகைத்து நிற்கும் நிலையை அன்றாடம் காண நேர்கிறது. காய்கறித் தோட்டம் என்பது இன்று மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது, குறைந்த இடம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட் களைக் கொண்டே காய்கறிகளை விளைவித்து நச்சுக் கலப்பற்ற காய்கறிகளை நாமே விளைவிக்க லாம்.
ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை
காய்கறிகள் உணவில் ஊட்டச் சத்தை அதிகரிப்பதோடு மட்டு மல்லாமல், உணவையும் ருசியாக் குகின்றன. ஊட்டச்சத்து வல்லு நர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங் களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.
வீட்டுக் காய்கறித் தோட்டம்
மேற்கண்ட கருத்துகளை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான காய் கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார சீர் கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது.
மிகக் குறைவான இடத்தில் காய்கறி பயிரிடப்படுவதால் மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் கட்டுப்பாட்டை மேற் கொள்ள முடிகிறது. மேலும் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினாலே போதுமானது. இதனால் காய்கறி களில் நச்சு இரசாயனங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.
இடம் தேர்வு செய்தல்
வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன் படுத்திக் கொள்ளவும் இது சுலப மாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொருத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொருத்தும் காய்கறி தோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய வேண்டும். காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்..
நிலம் தயார் செய்தல்
நிலத்தை 40 செ.மீ. ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். காய்கறித்தோல் பழத்தோல் கழிவு களை மண்ணில் இட்டு அதை உரமாக மாற்றவேண்டும்.
அட்டவணையில் கண்ட திட்டமுறையில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பத்தியிலும் சில பயிர்கள் இடைவிடாது இடம் பெறச் செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பத்தியிலும் ஒரு நெடுங்காலப் பயிரும், குறுகிய காலப் பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.
காய்கறி தோட்டத்தின்
பயன்கள்
முதலில் நம் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றிக் கொள் ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது. எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச் சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடை யனவாகும்.
- சாரா
விடுதலை ஞாயிறு மலர், 16.7.16

சனி, 3 செப்டம்பர், 2016

வேளாண்மையில் பூச்சிக் கொல்லியாகப் பயன்படும் சாராயம்!

தேவைகளின் உச்சமே கண்டுபிடிப்புகளின் தோற்றமாகும். இதை மெய்ப்பிக்கும் விதமாக மகாராஷ்ட்டிர மாநில விவசாயிகள் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை விரட்டுவதில், பயிர்களைக் காப்பதில் தாங்கள் சந்தித்துவரும் இடர்பாடுகளிலிருந்து விடுதலை பெற முயன்றதன் விளைவாக, சாராயத்தால் இத்தொல்லைக்கு விடிவு கிடைக்கும் என்பதைக் கண்டிருக்கின்றனர். இராசாயன உரங்களின் அபரிமிதமான உபயோகத்தால், நிலம் தன் நல்லியல்பு குன்றி, குறைந்த அளவே விளைச்சல் தரும் சூழலையும் மாற்றிடும் இயல்பு சாராயத்திற்கு உண்டு என்பதை அனுபவ வாயிலாக அறிந்து பயனடைந்து வருகின்றனர்.


நாட்டு சாராயம், கள்ளு, மற்றும் மஹா என்னும்படியான போதைப் பானம் ஆகியவற்றில் ஒன்றை 100லிருந்து 120 மி.லி. வரை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து, தாவரங்கள் பூத்துப் பலன் கொடுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவற்றின் மீது தெளித்தால், அது பூச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதோடு, தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஜிப்ராலிக் அமிலச் சுரப்பைத் தூண்டுவதால், வளர்ச்சியுடன் நல்ல விளைச்சலையும் தருகிறது என்பதைக் கண்கூடாகக் கண்டுள்ளனர்.

பூச்சிக்கொல்லிகளுக்கு நல்ல மாற்றாக இந்த (ஆல்கஹால்) சாராயம் உதவுகிறது என்று விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு 10 அல்ல 12 முறை பூச்சிக்கொல்லிகளை தெளிக்க பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகின்றது. ஆனால், சாராயக்கலவை ஒரு குடுவை 180 மிலி ரூபாய் 25 முதல் 30க்குள் அடக்கமாகி விடுவதோடு விவசாயிகளுக்கு சுலபமாகவும் கிடைத்துவிடுகிறது.

மகாராட்டிர மாநிலத்தில் லாத்தூர், அஸ்மணாபாத், நான்டெட் பிரபாணி, யுவமால் மற்றும் பீட் மாவட்டங்களில் இம்முறை பரவலாக உபயோகத்தில் உள்ளது.

ஆதாரம்: ‘Open’ 21.3.2016 தகவல்: கெ.நா.சாமி
-உண்மை இதழ்,1-15.7.16

செவ்வாய், 7 ஜூன், 2016

விளைச்சலுக்கு உதவும் நுண்ணுயிரிகள்


உலக மக்கள் தொகை, இன்று, 740 கோடி. இது, வரும், 2050க்குள் மேலும், 200 கோடி கூடிவிடும். இந்த கூடுதல், 200 கோடி பேருக்கு தேவையான உணவு பயிர்கள் தேவை என்றால், பயிர் உற்பத்தி, 70 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை பெருகியிருக்க வேண்டும். ஆனால், தற்போது ஆண்டுக்கு, 1 சதவீதம் மட்டுமே பயிர் உற்பத்தி கூடி வருகிறது.
அழியும் நுண்ணுயிரிகள் பயிர் உற்பத்தியை பெருக்குவதற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் போன்றவை தரும் பலன்களைவிட, உபத்திரவங்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு வேறு பல மாற்று வழிகளை, விவசாய விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர். அதில் ஒன்று தான் நுண்ணுயிரிகள். மனிதனின் உடலில், 3 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவற்றில் கணிசமானவை, உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. இதேபோல தான் தாவரங்கள் செழிக்கவும், பல நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் அழிக்கப்பட்டு விடுகின்றன.
இதை தடுக்க, விதையிலேயே, நல்ல நுண்ணுயிரிகள் கொண்ட திரவத்தை பூசிவிட்டால் என்ன என்று, அமெரிக்காவிலுள்ள இண்டிகோ நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது. ‘’தாவரங்களுக்கு உதவும் நல்ல நுண்ணுயிரிகளில், 40 ஆயிரம் நுண்ணுயிரிகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். இவற்றில் பல, இப்போது பரவலாக அழித்தொழிக்கப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும் உயிர்ப்பித்து விதைகளின் மேல் பூசி விடுவோம்,’’ என்கிறார், இண்டிகோவின் தலைவர் டேவிட் பெர்ரி.
விதைகள் மீது பூச்சு: தாவரம் சார்ந்த நுண்ணுயிரிகளை, இதற்கு முன் பலர் ஆராயந்துள்ளனர். என்றாலும், அவர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிரி களையே ஆராய்ந்தனர். ஆனால், இண்டிகோ போன்ற சில நிறுவனங்களே, தாவரங்களுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகளை ஆராய்கின்றன.நுண்ணுயிரி பூச்சு செய்யப்பட்ட விதைகள், முளைவிடும்போதே அவற்றின் நற்பயன்களை அனுபவித்து வளர்கின்றன. விளைச்சலும், 10 சதவீதம் அதிகம் கிடைப்பதாக இண்டிகோ தெரிவிக்கிறது.
தவிர, நுண்ணுயிரியில் ஊறி வளரும் பயிர்கள், அதிக உப்புள்ள மண், சூடான பருவநிலை போன்றவற்றை சுதாரித்து வளர்வதோடு, குறைந்த நீர் இருந்தாலும் நல்ல வளர்ச்சி காண்கின்றன.விவசாய நாடான இந்தியாவிலும் இந்த முறை பின்பற்றப்பட்டால், உணவு உற்பத்தி நிச்சயம் விண்ணைத் தொடும்.
-விடுதலை,24.3.16

புதன், 18 மே, 2016

3 விதமான காய்கள் காய்க்கும் அதிசய செடி: வேளாண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு


புதுச்சேரி, ஜன. 9 
புதுவை கூடப்பாக்கம் பகுதியில் சேர்ந்த வேளாண். விஞ்ஞானி வேங்கடபதி. இவர் கனகாம்பரம், சவுக்கு, மிளகாய் ஆகியவைகளில் புதிய ரகங்களை கண்டு பிடித்து சாதனை படைத் தார்.
தற்போது அவரும், அவரது மகள் சிறீலட் சுமியும் இணைந்து ஒரு செடியில் கத்திரிக்காய், மிளகாய், தக்காளி ஆகிய 3 வகை காய்கள் காய்க்கும் நவீன செடியை கண்டு பிடித்துள்ளனர்.
அந்த செடிக்கு கலாம் கத்திரி என்று பெயர் சூட்டி உள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சாதாரண கத்திரிக்காய் செடி 6 மாதம்தான் உயி ரோடு இருக்கும். இதை மாற்றி அவை 3 ஆண் டுகள் உயிரோடு இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
சுண்டைக்காய் செடி வேர் பலமானது. நீண்ட காலம் வாழும் சக்தி உள் ளது. எனவே, கத்திரிக் காய் செடியையும், சுண் டைக்காய் செடியையும் ஒட்டு முறையில் சேர்த் தோம். மேலும் தக்காளி, மிளகாய் செடிகளை ஒட்டு முறையில் அதனோடு இணைத்தோம். இதன் மூலம் புதிய ரக கத்திரிக் காய் செடி உருவாகியுள் ளது.
ஒட்டு முறையில் உரு வாக்கிய  செடியில் ஒரு கிளையில் கத்திரிக் காயும், ஒரு கிளையில் மிளகாயும், மற்றொரு கிளையில் தக்காளியும் காய்க்கும் தறுவாயில் உள்ளது. இந்த செடிக்கு கலாம் கத்திரி என்று பெயர் சூட்டி உள்ளோம். உழவர் தினத்தில் முதல் அமைச்சர் ரங்கசாமி இந்த புதிய ரகத்தை வெளியிட அனுமதி கேட்டுள் ளோம்.
வீட்டில் நவீன ரக இந்த ஒரு செடி வளர்த் தால் ஒரு குடும்பத்துக்கு தேவையான கத்திரிக் காய்கள் 2 ஆண்டுகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
விடுதலை,9.1.16

சனி, 14 நவம்பர், 2015

எல்லாமே இருக்கு நம் விவசாயத்தில்!


பூட்டன், பாட்டன், தந்தை இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் செய்துவந்த விவசாயத்தை நாம் ஏன் புறக்கணித்தோம் என்ற கேள்வி திவ்யாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. எம்.பி.ஏ., முடித்து விட்டு மாதம் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் சம்பாதித்த திவ்யாவை விவசாயத்தை நோக்கித் திருப்பியது எது?
திவ்யாவின் சொந்த ஊர், சென்னிமலையை அடுத்த கவுண்டன்பாளையம். அப்பா வாசுதேவனுக்கு விவசாயமும் வியாபாராமும் தொழில். அம்மா சுசீலா, இல்லத்தரசி. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஆறரை ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார் திவ்யா. கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் ஏதோ ஒரு போதாமை உணர்வு அவரது மனதுக்குள் நெருடிக்கொண்டே இருந்தது.
அப்பாவுக்கு வியாபாரத்தில் ஆயிரம்தான் வருமானம் வந்தாலும் எங்க தென்னந்தோப்புல இருந்து கிடைச்ச வருமானத்தைதான் என் படிப்பு செலவுக்குக் கொடுப்பார். ஒரு நாள் அதைப் பத்தி யோசிச்சப்பதான் விவசாய வருமானம் எவ்வளவு தனித்துவமானதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
நாமளும் விவசாயத் துறையில ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நாலு மாசம் ஒரு பயோ டெக் கம்பெனியில வேலை பார்த்தி ருந்ததால, விவசாயத்தைப் பத்தியும் விவசாயிகளோட நிலை பத்தியும் என்னால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது என்று சொல்லும் திவ்யா, தான் பார்த்துவந்த வேலையைத் துறந்தார்.
கோயம்புத்தூரில் விவசாய ஆலோசனை மய்யம் தொடங்கும் திவ்யாவின் முடிவுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு.
என்னோட இந்த முடிவை எல்லாருமே எதிர்த்தாங்க. ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்த்த நீ, சேத்துல இறங்கி வேலை செய்வியா?ன்னு என் கணவரே கேட்டார் - சொல்லும்போதே சிரிப்பு பொங்குகிறது திவ்யாவுக்கு. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்திவிட்டு தன் வேலைக்கான அடுத்த கட்டப் பணியில் இறங்கினார்.
பெண்களால் இயங்கும் மய்யம்
இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த ஆலோசனை மய்யத்தின் ஆலோசகர்களாக இருக்கிறார்கள். பல மாநிலங்களில் இருக்கும் இயற்கை வேளாண் இடுபொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார் திவ்யா. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டது திவ்யாவின் வேளாண் அறிவை விசாலமாக்கியது.
விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கவும், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் இங்கே விவசாய மருத்துவர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்கப் பெண் ஊழியர்களைக் கொண்டு செயல்படுவது இந்த மய்யத்தின் இன்னொரு சிறப்பம்சம்!
-விடுதலை,10.11.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

திசு வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி பயிற்சி பட்டறை


தஞ்சை, அக்.17_ காவிரி டெல்டா உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம் தனது உறுப்பினர்களுக்காக புதிய தொழில்நுட்பங் களையும், சந்தை வாய்ப்பு களையும் ஏற்படுத்தி வரு கின்றது.
அதன் தொடர்ச்சியாக திசு வாழை மற்றும் காய் கறி சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்காக ஒரு நாள் பயிற்சிப் பட் டறை அக்டோபர் 16 ஆம் தேதி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

நபார்டு வங்கி ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ், மற்றும் பெரியார் தொழில் நுட்ப வணிகக் காப்பகம் இவற்றுடன் இணைந்து நடத்திய இந்தப் பயிற் சியை பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசி ரியர் நல்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்து தலை மையுரை ஆற்றினார்.
திருச்சி மகளிர் தோட் டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் எம். ஜவகர்லால் முதுகுளம் பகுதி வாழை மற்றும் காய் கறி சாகுபடி திட்டத் தைப்பற்றி அவர் உரை யாற்றும்போது,பழங்கள் மற்றும் மல் லிகை மலர்கள் ஏற்றுமதி செய்வதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறி, இதுபோல காய்கறிகளுக்கும் செய்ய முடியும் என்று கூறினார். ஜெயின் நிறுவன அலு வலர்கள் தமிழ்ச்செல்வன் குருசாமி, மணி அமுதன் ஆகியோர் திசு வாழை வளர்ப்பு, சொட்டுநீர் பாச னம், நெல்லுக்கு சொட்டு நீர்ப்பாசனம் போன்ற தலைப்புகளிலும் வேளாண் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் வெ.பிரகாசம், அங்கக முறையில் காய் கறிச் சாகுபடி செய்யும் முறை பற்றியும், அதற்கான அங்கீகாரம் பெறும் முறைகளைப் பற்றியும் விளக்கிக் கூறினார்.
வாழை முன்னோடி விவசாயி இராமகிருஷ் ணன் மற்றும் அங்ககக் காய்கறி விவசாயி முருகன் ஆகியோர் தமது அனுப வங்களை பகிர்ந்து கொண் டனர். சொட்டு நிர்ப்பாச னக் கருவிகள், திசு முறை யில் உருவாக்கிய வாழை மற்றும் மாதுளை கன்று கள், சொட்டு நீர்ப்பாசன முறையில் நெல் உற்பத்திக் கான மாதிரி வயல் போன் றவற்றுடன் பல்கலைக் கழக உயிர்த் தொழில் நுட்பத்துறை மாணவர் கள் உற்பத்தி செய்து வரும் நுண்ணுயிர் இடுபொருள் களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. இந்நிகழ்ச்சியில் 400_க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
=விடுதலை,17.10.15